×

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை இரு நீதிபதிகள் அமர்வு அதிரடி

மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க ஐகோர்ட் கிளை அதிரடியாக இடைக்கால தடை விதித்துள்ளது. மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை நிறைவேற்றாத மதுரை கலெக்டர், காவல் துறை ஆணையாளர், அறநிலையத்துறை அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மனுதாரரை 5 பேருடன் சென்று மலை மீது மலர் தூவி வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். இதனை எதிர்த்து கோயில் நிர்வாகம், அறநிலையத்துறை, கலெக்டர் தரப்பில் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் ஐகோர்ட் கிளையில் இரு நீதிபதிகள் அமர்வில் தாக்கல் செய்யப்பட்டன.

இதேபோல் சிக்கந்தர் தர்கா நிர்வாகம் தரப்பில் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘‘தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சென்னையில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, தீபம் ஏற்றாதது குறித்து அரசு மற்றும் கோயில் நிர்வாகத்தின் மீது அதிருப்தியை தெரிவித்திருந்தார். மாதிரி தீபத்தூண் அமைத்து தீபம் ஏற்றுகிறார். சனாதன தர்மத்தை பின்பற்றுவதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். எனவே, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வேறு ஒரு நீதிபதிக்கு மாற்றம் செய்ய வேண்டும்’’ என கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், ‘‘இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. இதில் அவசரம் காட்ட முடியாது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம். இது சிறிய பிரச்னை. ஆனால் ஊதி பெரிய பிரச்னையாக மாற்றப்பட்டுள்ளது’’ என்றனர். தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் வீரா.கதிரவன், டி.ரவீந்திரன் ஆகியோர், ‘‘தனி நீதிபதியின் உத்தரவுக்கு ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது.

ஆனாலும், தனி நீதிபதி தொடர்ந்து இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறார்’’ என்றனர். தமிழ்நாடு அரசுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ‘‘அரசு இந்த விவகாரத்தை சுமூகமாகவே கையாள நினைக்கிறது. அரசு அமைதியையே விரும்புகிறது. அவசரம் காட்டினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். இந்த விவகாரத்தில் இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவை எதிர்த்து ராம.ரவிக்குமார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதை அவர் நீதிமன்றத்தில் முறையாக தெரிவிக்கவில்லை. கோயில் இடத்தில் தனிநபர்களை எவ்வாறு அனுமதிக்க முடியும். எனவே, போதுமான கால அவகாசம் தேவை’’ என்றார். இதற்கு நீதிபதிகள், ‘‘தனி நீதிபதியின் உத்தரவு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தப் பிறகு, அந்த வழக்கை தனி நீதிபதி விசாரிக்க முடியாது. அது தானாக இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணையில் இருக்கும்.

இதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி விசாரிக்க வேண்டுமா அல்லது இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண்டுமா என்பது குறித்து இந்த நீதிமன்றம் தான் விசாரணை செய்து உரிய முடிவு எடுக்கும். அதுவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதியின் அனைத்து உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ எனக்கூறி விசாரணையை ஜூன் 4க்கு தள்ளி வைத்தனர்.

* ‘திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ய வேண்டும்’
மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரக்கோரி வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஸ்ரீமதி, புதிதாக மனு அளிக்கவும், அதனை அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார்.

ஆனால் எனது மனுவை பரிசீலித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசு வழக்கறிஞர் மகாராஜன் ஆஜராகி, ‘‘மலையை அளவீடு செய்தால் மட்டுமே மனுதாரர் கோரிக்கை குறித்து பரிசீலிக்க இயலும். ஒன்றிய தொல்லியல் துறை அளவீடு செய்ய தயாராக உள்ளது.

வருவாய் துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் மதுரை கலெக்டர் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். அவர் ஒன்றிய தொல்லியல் துறையுடன் சேர்ந்து திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ய வேண்டும். இதற்கு வருவாய்த்துறையினர் போதிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இதனை மே மாதத்திற்குள் முடிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்தனர்.

Tags : G.R. Swaminathan ,Thiruparankundram Deepam ,Madurai ,High Court ,Thiruparankundram ,Madurai… ,
× RELATED படிக்கும் வயதில் படிப்பில் மட்டும்...