×

வேட்பு மனு தள்ளுபடி ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயற்சி: போலீசார் விசாரணை

சென்னை: ஆட்டோ டிரைவர் தனது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்து தீ குளிக்க முயற்சி செய்ததால் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சோழிங்கநல்லலூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பு மனு தாக்கல் சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தில் நடந்தது. இங்கு மொத்தம் 47 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் நடந்த பரிசீலனையின்போது 20 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதில் மேடவாக்கம், கலைஞர் நகரை சேர்ந்த ஞானசேகர்(47) என்ற ஆட்டோ டிரைவரின் வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இவர் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். மனு தள்ளுபடியானதை தொடர்ந்து, நேற்று சோழிங்கநல்லூர் தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு ஆட்டோவில் சென்றார்.

அங்குள்ள ஊழியர்களிடம், ‘‘ஏன் எனது வேட்பு மனுவை தள்ளுபடி செய்தீர்கள். பிழை இருந்தால் திருத்தி தர கூறலாமே. ஆட்டோ டிரைவர் என்பதால் தள்ளுபடி செய்தீர்களா’ என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஊழியர்கள், தள்ளுபடிக்கான விவரத்தை விளக்கி கூறியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ஞானசேகர், அவரது ஆட்டோ கண்ணாடியை கையால் உடைத்ததில், அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின், ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து, உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே, அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின், ஆம்புலன்ஸ் வரவழைத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால்அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Chennai ,Sholinganallur Assembly ,Chennai Corporation ,Sholinganallur Zonal Office.… ,
× RELATED கொடைக்கானலில் மழை இல்லாததால்...