- எண்ணெய் தொழில் துறை
- சென்னை
- அசோகன்
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான எண்ணெய் தொழில் துறை
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான எண்ணெய் தொழில்துறைத் துறை…
சென்னை: மாநிலம் முழுவதும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எண்ணெய் தொழில் துறையின் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் அசோகன் கூறினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான எண்ணெய் தொழில் துறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அசோகன் கூறியதாவது: 5 கிலோ இலவச வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் தினசரி இருப்பை ஒன்றிய அரசு இரட்டிப்பாக்கியுள்ளது. இது குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் பிற இடம்பெயரும் மக்களுக்கு பயனளிக்கும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், மாநில அரசு துறைகளுடன் வலுவான ஒருங்கிணைப்பின் மூலம் இந்த மேம்படுத்தப்பட்ட ஒதுக்கீடு திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், உரிய பிரிவினருக்குப் பலன் தாமதமின்றி சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது.
சென்னை, திருவள்ளூர், கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் போன்ற முக்கிய தொழில் மற்றும் நகர்ப்புற பகுதிகளில், எண்ணெய் நிறுவனங்கள் மாநில அரசுடன் இணைந்து, புலம்பெயர் தொழிலாளர்களை நேரடியாக சென்றடைவதற்காக ஒரு குறிப்பிட்ட கள அளவிலான அணுகுமுறையை கடைப்பிடித்து வருகிறது. தொழில் மையங்கள், கட்டுமான தளங்கள் மற்றும் தொழிலாளர் குடியிருப்புகள் உள்ளிட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு எல்பிஜி விநியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டு, 5 கிலோ சிலிண்டர்கள் எந்தவித சிரமமுமின்றி கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
புலம்பெயர் தொழிலாளர் பகுதிகளில் உள்ள பெட்ரோல் பம்புகள், கடைகள் போன்ற ஏற்கனவே உள்ள விற்பனை நிலையங்கள் மூலமாகவும், கள விற்பனை பிரசாரங்கள் வழியாகவும் இந்த சிலிண்டர்கள் நேரடியாக கிடைக்க செய்யப்படுகின்றன. 5 கிலோ எப்டிஎல் எல்பிஜி புதிய இணைப்புகள் குறைந்தபட்ச ஆவணங்களுடன், ஒரு எளிய அடையாள ஆதார் மட்டும் கொண்டு விற்கப்படுகின்றன. இதன் மூலம், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் நிரப்புவது மட்டுமின்றி, புலம்பெயர் தொழிலாளர்களுக்கான அணுகல் தடைகளும் நீக்கப்படுகின்றன.
கடந்த 7ம் தேதி முதல் எப்டிஎல் சிலிண்டர்களின் இருப்பு, நெருக்கடிக்கு முந்தைய நிலையை விட சுமார் 70% அதிகமாக, கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 5 கிலோ எப்டிஎல் சிலிண்டர்களின் இருப்பை இரட்டிப்பாக்க எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறது. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் மூலம் தடையற்ற மற்றும் இடைவிடாத எல்பிஜி விநியோகம் இருக்கும். மேலும், பாட்டிலிங் ஆலைகள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் போதுமான கையிருப்புடன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் எல்பிஜி விநியோகம் சீராக இருக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்கள் எளிதில் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
