சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுவதாக முதல்வரின் செயலாளர் உமாநாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யாத நிலையில் அவருக்கு எதிரான வழக்கை எப்படி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியும், என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் முதல்வரின் செயலாளர் உமாநாத், தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் செயல்பட்டு வருகிறார். தேர்தல் அறிவிப்புக்கு பிறகு அரசு அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் நிலையில் தொடர்ந்து முதல்வரின் செயலாளராக உமாநாத் மாவட்ட கலெக்டர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
எனவே, முதல்வரின் செயலாளர் உமாநாத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர், ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யாத நிலையில், இந்த பொதுநல வழக்கை எப்படி விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியும்?. புகார்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ஐஏஎஸ் அதிகாரி உமாநாத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் அவரை எதிர்மனுதாரராக ஏன் சேர்க்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து, நீதிபதிகள், உமாநாத்தை எதிர்மனுதாரராக சேர்க்க அவகாசம் வழங்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரப்பட்டதை ஏற்று விசாரணையை நீதிபதிகள் ஏப்ரல் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
