தொப்பையைக் குறைக்கும் வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

அழகையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கும் விஷயம் தொப்பை. தொப்பை ஒரே நாளில் வருவதில்லை. சிறுகச்சிறுக சேர்ந்து ஒருநாள் துருத்திக்கொண்டு நிற்கும்போதுதான் சம்பந்தப்பட்டவருக்கே அதன் தீவிரம் புரியும். தொப்பை எப்படி ஒரே நாளில் வருவதில்லையோ அப்படியே அதை ஒரேநாளில் குறைக்கவும் முடியாது. அதனால், தொப்பை வருவதற்கு முன்பு எச்சரிக்கையாக இருப்பதே நல்லது.

தொப்பைக்கான காரணங்கள்

உடலின் உறுப்புகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான உறுப்புகள் வயிற்றுப் பகுதியில்தான் உள்ளன. இவை அனைத்தும் பெல்விஸ் என்ற கூடை போன்ற பெரிய பையில் அமைந்துள்ளன. இங்குள்ள அனைத்து உறுப்புகளும் சிறிய, சிறிய தசைநார்களால் பிடித்து நிறுத்தப்பட்டு உள்ளன. இதில் மிகவும் மென்மையான பகுதி வயிற்றின் முன்பகுதிதான். இங்கு இதை இழுத்துப் பிடிக்க, வலுவாக வைக்க எந்தவிதமான எலும்பும் இல்லை.

இந்த மென்மையான வயிற்றின் முன்பகுதி, அதிக எடையைத் தாங்கக்கூடிய வலிமை இல்லாத காரணத்தால் சிறிது சிறிதாக பெருத்து தொந்தி என்கிற தொப்பை தோன்றுகிறது. அதன்பிறகு கொழுப்புச்சத்து மற்ற இடங்களுக்கும் பரவி, உடல் அதிகபருமன் அடைந்து, ஆரோக்கியத்தையும், அழகையும் கெடுக்கிறது.

தொப்பையினால் ஏற்படும் பாதிப்புகள்

தொப்பை உள்ளவர்களுக்கு முதுகுவலி, கழுத்து வலி என்றும் உடல் பெருப்பதால், உடலின் அனைத்து எலும்புகள் இணையும் இடங்களிலும் கடுமையான வலி வந்து அவஸ்தைப்பட வேண்டிவரும். தொப்பை வைப்பதால், வயிற்றின் அதிக பளு காரணமாக அங்குள்ள உறுப்புகளும், உடலில் உள்ள மற்ற உறுப்புகளும் சரிவர செயல்படாமல் எல்லாவித நோய்களும் வர அதிக வாய்ப்புகள் உண்டு.

தொப்பையை குறைக்கும் வழிகள்

தினமும் ஏதாவது ஒரு வகை உடற்பயிற்சியினை சிறிது நேரம் செய்வது மிக அவசியமாகும்.

உதாரணமாக…

நடத்தல், ஓடுதல், நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல், ஸ்கிப்பிங் செய்தல், பளு தூக்கி செய்யும் வலிமைக்கான உடற்பயிற்சிகள் செய்யலாம். இதுபோன்ற பயிற்சிகள் செய்வதினால், இதயத்துடிப்பு சீராக்கப்படுகிறது. ரத்த அழுத்தம் அதிகரிப்பதை தடுக்கிறது. உடலில் அதிக கொழுப்பு சேர்வதை எரிக்கிறது. நீரிழிவு போன்ற குறைபாடுகள் வராமல் தடுக்கிறது. நிம்மிதியான நீண்ட உறக்கத்தை தந்து எப்போதும் உடலை புத்துணர்வோடு காக்கிறது. உடற்பயிற்சியை பொதுவாக மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இதயம், மூச்சுப்பயிற்சி, ரத்த ஓட்டத்தை பலப்படுத்தும் உடற்பயிற்சிகள். இந்த வகை உடற்பயிற்சிகள் கலோரிகளை எரிக்கிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதயத்தை மிகவும் வலுவாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் தொப்பை வராமல் தடுக்கப்படுகிறது.

தொகுப்பு: தவநிதி