×

எடப்பாடி பழனிசாமி என்ற அசிங்கத்தை அரசியலில் இருந்தே துடைத்தெறிய வேண்டும்: சீர்காழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சீர்காழி: பழனிசாமியை என்ற அசிங்கத்தை அரசியலில் இருந்தே துடைத்தெறிய வேண்டும் என்று சீர்காழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் நேற்று நடந்த திமுக கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் சீர்காழி மதிமுக வேட்பாளர் செந்தில்நாதன், பூம்புகார் திமுக வேட்பாளர் நிவேதா முருகன், மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் ஜமால் முகமது யூனுஸ், நாகப்பட்டினம் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, வேதாரண்யம் திமுக வேட்பாளர் புகேழந்தி, கீழ்வேளூர் மா.கம்யூ. வேட்பாளர் லதா ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

பேசுவதற்கு எந்த கண்ட்டெண்டும் இல்லாமல், கண்டதையும் பேசும் ஒரு எதிர்க்கட்சி தலைவராக பழனிசாமி வலம் வந்து கொண்டிருக்கிறார். நாள்தோறும் கருத்துக்கணிப்பு முடிவுகள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது அல்லவா. அதில், தி.மு.க. கூட்டணியின் வெற்றி எண்ணிக்கை கூட கூட, தோல்வி பயத்தில் பழனிசாமியின் தரம் கீழே கீழே இறங்கிக் கொண்டே போகிறது. கூவத்தூரில் எம்எல்ஏக்களை ஏலம் எடுத்து முதலமைச்சரான அவர், அந்தப் பதவியில் இருக்கும் தகுதியே இல்லை என்று சொல்லி, நீங்கள் எல்லாம் தோற்கடித்தீர்கள்.

இப்போது அவரே, முதலமைச்சராக மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கவும் தனக்கு தகுதி இல்லை என்பதுபோன்று நடந்து கொள்கிறார். தன்னுடைய தராதரம் இல்லாத பேச்சுகளால், தன்னையும் – தன்னுடைய கட்சியையும் மக்களிடம் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். 2026 தேர்தல் முடிவுகள், பழனிசாமி என்ற அசிங்கத்தை அரசியலில் இருந்தே துடைத்தெறிய வேண்டும். எவ்வளவு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது.

ஒன்றிய பா.ஜ. அரசு மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்குகிறார்கள். கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களையும், சர்ச்சுகளையும் குறிவைத்து (FCRA) சட்டத் திருத்தம் கொண்டு வரப்பார்க்கிறார்கள். பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில், நாடாளுமன்றத்தை அவசரமாகக் கூட்டி தொகுதி மறுவரையறை செய்யத் துடிக்கிறார்கள். தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்தும் கடுமையான பாதிப்பை சந்திக்க போகிறது.  முக்கியமான அரசியலமைப்பு சட்டத்திருத்தங்களை அவசர அவசரமாக செய்யப் போகிறார்கள்.

இதை நாம் கண்டித்து, பல்வேறு மாநிலங்களுக்கு தேர்தல் நடக்க இருக்கும் இந்தச் சமயத்தில், எதற்கு இந்த அவசரம்? என்று கேட்கிறோம். இந்தியாவில் இருக்கும் அனைத்து தலைவர்களும் இதையே கேட்கிறார்கள். இது எதை பற்றியும் வாய் திறந்து பேச வக்கில்லாமல் இருக்கிறார் பழனிசாமி. அதற்கு காரணம் என்ன? அதிமுகவையும், பழனிசாமியையும் குத்தகைக்கு எடுத்திருப்பது யார்? பாஜ. அதாவது, டெல்லி டீம்! அந்த டீம்-ல் இருந்து, இப்போது அடிக்கடி ஒன்றிய அமைச்சர்களும், பாஜ முதலமைச்சர்களும் தமிழ்நாட்டுக்கு படையெடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களிடம் நான் கேட்ட கேள்விக்கும், நான் விட்ட சவாலுக்கும் பதில் இருக்கிறதா? இல்லை. நான் கேட்கிறேன், தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டுக்காக குரல் கொடுக்காத பழனிசாமி, வேறு எதற்காகத்தான் பேசுவார்?.  நேற்று மதுரைக்கு வந்த மகாராஷ்டிரா பாஜ முதலமைச்சர் பட்நவிஸ் என்ன சொன்னார் என்று பார்த்தீர்களா? நான் இன்றைக்கு டிவிட்டரில் அதற்கு செய்தி போட்டிருக்கிறேன். மகாராஷ்டிரா முதலமைச்சரிடம் ‘மதுரைக்கு ஏன் மெட்ரோ நிராகரிக்கப்பட்டது’ என்று செய்தியாளர்கள் கேட்கிறார்கள். அதற்கு அவர் சொல்கிறார்.

‘மதுரையில் பாஜ எம்எல்ஏ வெற்றி பெற்றால், மதுரைக்கு மெட்ரோ கிடைக்கும்’ என்று பேசுகிறார். முதலில் நான் கேட்கிறேன், அவருக்கும், மதுரை மெட்ரோவுக்கும் என்ன சம்பந்தம்? அவர் என்ன பிரதமரா? இல்லை, அந்தத் துறைசார்ந்த ஒன்றிய அமைச்சரா? அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர் பேசும் பேச்சா இது?. பாஜவை வெற்றி பெற வைத்தால்தான், உங்களுக்கு மெட்ரோ தருவோம் என்று வெளிப்படையாக கட்ட பஞ்சாயத்து செய்கிறார்.

பட்நவிஸ் அவர்களே! இப்படி, பிளாக்மெயில் செய்ய உங்களுக்கு வெட்கமே இல்லையா. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள், இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? இப்போதாவது மக்கள் பிரச்னையைப் பேசுவீர்களா? இல்லை, வழக்கம்போல் உங்கள் சொந்தக்கதை சோக கதையைத்தான் பேசப் போகிறீர்களா? பாஜவின் ஒரே நோக்கம் தமிழ்நாடு வளரக் கூடாது. ஆனால், அதையெல்லாம் மீறித்தான், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான திட்டங்களை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறேன்.

முத்திரைத் திட்டங்களே, நிறைய இருக்கிறது. அந்த பட்டியலை எல்லாம் பல கூட்டங்களிலும் தொடர்ந்து சொல்லி வருகிறேன். வாக்கு எண்ணப்படும் மே 4 கல்யாண நாள் என்றால், தேர்தல் அறிக்கை வெளியிட்ட நாள்தான் நம்முடைய வெற்றிக்கு நிச்சயதார்த்த நாள்! உங்களுக்கு என்ன செய்திருக்கிறோம் என்று சொல்லி, இனி செய்யப் போவதை சொல்லி வாக்கு கேட்டால், அது நம்முடைய திராவிட மாடல்!

அவதூறுகளை மட்டுமே பேசி, பொய்யை மட்டுமே சொன்னால், அது அடிமை பழனிசாமி மாடல்! தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்ற இந்த ஜனநாயக போரில், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைத்தான் நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* சீர்காழி உழவர் சந்தையில் நடந்து சென்று பிரசாரம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 7.30 மணிக்கு சீர்காழி தென்பாதி தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் இருந்து உழவர் சந்தைக்கு நடைபயிற்சி சென்றார். அப்போது, வழிநெடுகிலும் மக்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்ததுடன் செல்பி எடுத்து கொண்டனர். உழவர் சந்தையில் காய்கறி வியாபாரிகளிடம் காய்கறிகளின் விலைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர்களது குறைகளையும் கேட்டார்.

இதைத்தொடர்ந்து கச்சேரி சாலை, அரசு மருத்துவமனை சாலை, பிடாரி மேலவீதி, பிடாரி வடக்கு வீதி, பழைய பேருந்து நிலையம் வழியாக மக்களை சந்தித்தவாறு நடந்து சென்றார். சீர்காழி அரசு மருத்துவமனை அருகில் திரண்டு நின்ற மக்கள் தங்களது கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கூறினர். மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார்.

பின்னர் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்று டீ குடித்த முதல்வர், கடை உரிமையாளரிடம் வியாபாரம் எப்படி உள்ளது என்று கேட்டறிந்தார். அப்போது அங்கு வந்த பள்ளி மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். எப்படி படிக்கிறீர்கள், மதிய உணவு சரியாக வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார்.  பின்னர் மாணவ, மாணவிகளுடன் செல்பி எடுத்துக் கொண்டார். பின்னர், அங்கிருந்து கடைவீதி வழியாக சீர்காழி பழைய பேருந்து நிலையம் வரை நடை பயிற்சி சென்றார்.

வழி நெடுகிலும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வாக்கு சேகரித்தார். காலை 8.30 மணிக்கு பழைய பேருந்து நிலையத்தில் நடைபயிற்சியை முடித்தார். பின்னர் பிரசார வாகனத்தில் புறப்பட்டு திருவெண்காட்டுக்கு சென்றார். சுமார் 2 கிமீ தூரம் முதல்வர் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். முதல்வருடன், சீர்காழி தொகுதி மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வன், மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் தொகுதி திமுக வேட்பாளருமான நிவேதா முருகன் ஆகியோர் உடன் சென்றனர்.

* டெல்லியின் ரிமோட் கண்ட்ரோலுக்கு ஆடுகிற அடிமைகள் தமிழ்நாட்டை ஆளக்கூடாது
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்றிரவு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பச்சை பொய் பழனிச்சாமி ஆட்சியில் தமிழ்நாடு எப்படி எல்லாம் பாழ் அடிக்கப்பட்டது. கரப்ஷன், கலக்‌ஷன், கமிஷன் இதுதான் பழனிச்சாமியின் டிரேட் மார்க்… தொழில் தொடங்க வந்த கம்பெனி எல்லாம் வெளி மாநிலங்களுக்கு ஓடினார்கள். அமைச்சர்களே குட்கா மாமூல் வாங்கினார்கள்.

மாமூல் பட்டியலில் 2 டிபிஜிக்கள் இருந்தார்களே. பழனிச்சாமிக்கு தெரியாமலா, இந்த மாமூல் வசூல் நடந்தது. பழனிச்சாமி ஆட்சியில்தான் தமிழ்நாடு போதை மையமானது. பட்டிதொட்டி எல்லாம் போதை பொருள் விற்றது. கைக்கட்டி வேடிக்கை பார்த்து பழனிச்சாமி பாக்கெட்டுக்கு மாமூல் வந்தது. சொல்வதற்கு ஏதாவது சாதனை பழனிச்சாமியிடம் இருக்கிறதா? இல்லை. அதனால்தான் அவரது பேச்சு என்பது முழுக்க முழுக்க பொய்களும், அவதூறுகளும் நிறைந்திருக்கிறது.

அதுமட்டுமா, அவரது எஜமான்களாக இருக்கக் கூடிய பாஜக கூட எதுவும் சொல்ல முடியவில்லை. சிதம்பரம் பக்கத்தில் கொள்ளிடம் ஆற்றில் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.6,433 கோடியில் புதிதாக கட்டிய மேம்பாலம் திடீரென உள்வாங்கி இருக்கிறது. இதுதான் பாஜக திட்டத்தின் குவாலிட்டி. இதனால்தான் அவர்கள் சொல்லிக் கொள்ள சாதனைகள் எதுவும் இல்லை. பழனிச்சாமி ஆட்சியின் அடையாளங்கள் என்ன? பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாட்சியே சாட்சி…

அதுதான் அடையாளம். துப்புக்கெட்ட ஆட்சிக்கு தூத்துக்குடியே சாட்சி… கொடூரமான ஆட்சிக்கு கொடநாடே சாட்சி… கேடுகெட்ட ஆட்சிக்கு சாத்தான்குளமே சாட்சி. இப்படி எல்லாமே நெகடீவ்தான். இது எல்லாம் பழனிச்சாமி ஆட்சியின் பல் இளிக்கும் லட்சணம். தவறுக்கு மேல் தவறு செய்த பழனிச்சாமி, தன்னுடைய தவறுகளில் இருந்து தப்பிக்க சரண்டர் ஆகி இருக்கக்கூடிய இடம்தான் பாஜவின் வாஷிங்மெஷின்.

தன்னுடைய தவறுகளில் இருந்து தப்பிக்க அவர் கொடுத்த விலைதான் தமிழ்நாட்டின் உரிமைகள். தமிழ்நாட்டிற்கு கால்பதிக்க முடியாத பாஜகவுக்கு பின் வாசலை திறந்து விட வேண்டும் என்பதுதான். டபுள் இன்ஜின் டப்பா இன்ஜின் என சொல்லிக் கொண்டு டெல்லியின் ரிமோட் கண்ட்ரோலுக்கு ஆடுகிற அடிமைகள் தமிழ்நாட்டை ஆளக்கூடாது. தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கிற ஆணவ பாஜகவும், அடிமை அதிமுகவும் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் எம்ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, காங்., முன்னாள் தலைவர் அழகிரி, விஷ்ணு பிரசாத் எம்பி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Edappadi Palaniswami ,Chief Minister ,M.K. Stalin ,Sirkazhi ,Palaniswami ,DMK ,Sattanathapuram ,Sirkazhi MDMK ,Senthilnathan ,Poombukhar ,
× RELATED பெண்ணின் குடும்பத்தை ஊரைவிட்டு...