×

மோடி அரசின் நிர்வாக சீர் கேட்டுக்கு நாகை நெடுஞ்சாலையில் ரூ.6500 கோடியில் கட்டப்பட்ட பாலம் இடிந்ததே உதாரணம்: பீட்டர் அல்போன்ஸ் கடும் தாக்கு

சென்னை: பிரதமர் மோடி அரசின் நிர்வாக சீர் கேட்டுக்கு, நாகை நெடுஞ்சாலையில் ரூ.6500 கோடியில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததே உதாரணம் என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினார். தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் கார்த்தி சிதம்பரம் தலைமையில் வரும் 9ம்தேதி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னையிலே முகாமிட்டு கொண்டு, தமிழக அரசின் மீதும், காங்கிரஸ் கட்சியின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சுமத்தி வருகிறார்.

மோடி அரசினுடைய நிர்வாகம் எவ்வளவு சீர்கேடான நிர்வாகம், ஊழல் நிறைந்த நிர்வாகம் என்பதற்கு நேற்றைய தினம் விழுப்புரம், நாகை நெடுஞ்சாலையிலே தேசிய நெடுஞ்சாலை துறையால் ரூ.6,500 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் தான் உதாரணம். கட்டி ஒரு ஆண்டு கூட ஆகாத நிலையில் பல இடங்களில் வெடிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் அந்த மேம்பாலம் நேற்று இடிந்து விழுந்துள்ளது. தேர்தல் பிரசாரத்திற்காக வந்துள்ள பியூஷ் கோயல் முதலில் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

சாத்தான்குளம் தீர்ப்பு, தந்தை மகன் இரட்டை கொலை வழக்கிலே வழங்கப்பட்ட தீர்ப்பு நீதித்துறையினுடைய சரித்திரத்திலே மிகவும் பாராட்டத்தக்க ஒரு மகத்தான தீர்ப்பு. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி இந்த தீர்ப்பை வரவேற்கிறது. இந்த இரட்டை மரண தண்டனை அன்றைய தினம் ஆட்சியிலிருந்த எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவே நாங்கள் பார்க்கிறோம். அவருக்கும், அவருடைய நிர்வாகத்தில் இருந்த காவல்துறைக்கும் சேர்த்து தான் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவே கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Nagapattinam Highway ,Modi government ,Peter Alphons ,Chennai ,Tamil Nadu Congress Party ,Sathyamoorthy ,Bhavan ,
× RELATED தமிழகத்தின் கோடீஸ்வர வேட்பாளர்:...