×

சிதம்பரம் தவெக வேட்பாளர் வேட்பு மனு நிராகரிப்பு: செங்கோட்டையனுக்கும் கடும் எதிர்ப்பு, தவாக, சசிகலா கட்சி வேட்பாளர்களின் மனுவும் தள்ளுபடி

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் முடிந்தது. சிதம்பரம் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக மற்றும் சுயேச்சைகள் என 29 வேட்பாளர்கள் கொடுத்த வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று நடந்தது. இதில் தவெக வேட்பாளர் டாக்டர் பாரி, தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர்கள் சுரேந்தர், சுதா, இந்திய குடியரசு கட்சி வீரா அன்புசெல்வன், பகுஜன் சமாஜ் கட்சி சுபஸ்ரீ, சுயேச்சைகள் ஆனந்தி, கண்ணன், சுவாதிஷ், ராஜாராம் என 9 வேட்பாளர்கள் அளித்த வேட்பு மனுவில் பிழைகள் உள்ளிட்ட காரணங்களால் நிராகரிக்கப்பட்டன.

அதேசமயம் தவெக வேட்பாளர் பாரி மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக தந்தை நெடுஞ்செழியன் மனு ஏற்கப்பட்டது. இதுகுறித்து நெடுஞ்செழியன் கூறுகையில், முதலில் மகன் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர். பின்னர் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் குழப்பத்தை உண்டு பண்ணி, வேண்டும் என்றே எங்கள் கட்சி தோற்க வேண்டும் என சதி திட்டம் தீட்டி தள்ளுபடி செய்ய வைத்துள்ளனர். இருந்தாலும் எங்களுடைய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது, என்றார்.

தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கோபி தொகுதியில் தவெக சார்பில் கடந்த 31ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் நேற்று வேட்பு மனு பரிசீலனையின் போது 14 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. அதே நேரத்தில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன், மாற்று வேட்பாளரான அருள் ராமச்சந்திரன் உள்ளிட்ட 5 பேரின் வேட்பு மனுக்கள் மீது சேலம் மூத்த வழக்கறிஞர் தனசேகர் ஆட்சேபனை தெரிவித்தார்.

செங்கோட்டையன் வாங்கிய வீட்டிற்கு வருமான வரி செலுத்தவில்லை என்றும், நோட்டரி பப்ளிக் உரிமம் காலாவதியான உரிமம் வைத்துள்ள வழக்கறிஞர் மூலமாக அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவானந்தம், செங்கோட்டையனின் முகவர்களிடம் மாலை 5 மணிக்குள் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து செங்கோட்டையனின் தரப்பில் இருந்து உரிய ஆவணங்கள் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவரது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார். இதனால் கோபி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணி வரை பரபரப்பு நிலவியது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதியில் வேட்புமனு பரிசீலனையில் தமிழக வாழ்வுரிமை கட்சி (தவாக) வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது.

ஓசூர் அடுத்த பேரிகை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் தவாக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.அப்போதே, அதில் போதிய தகவல்கள் இல்லை என்றும், பரிசீலனைக்கு முன்பாக சரியான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற பரிசீலனையின்போது, விஜயகுமார் கொண்டுவந்த கூடுதல் ஆவணங்களை ஏற்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். போதிய விவரங்கள் இல்லாததை சுட்டிக் காட்டி, தேர்தல் நடத்தும் அலுவலர் ஆக்ரித்தி சேத்தி, மனுவை நிராகரிப்பதாக அறிவித்தார்.

தவாக சார்பில் மாற்று வேட்பாளர் யாரும் மனு தாக்கல் செய்யாதது குறிப்பிடத்தக்கது. திருச்சி கிழக்கு தொகுதியில் சசிகலாவின் அஇபுதமமுக வேட்பாளர் சூர்யா, லால்குடியை சேர்ந்தவர். அவரது சொந்த ஊரான லால்குடி தாலுகா அலுவலகத்தில் இருந்து உரிய கையெழுத்து வாங்காமல் மனு செய்யப்பட்டிருந்ததால் அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதே போல் சுயேச்சை வேட்பாளர் அபிராமி 25வயது என்று குறிப்பிடுவதற்கு பதிலாக 23 என்று தவறாக குறிப்பிட்டிருந்ததால் தள்ளுபடி செய்யப்பட்டது.

* சசிகலா, ராமதாஸ் கூட்டணி வேட்பாளர்கள் மனு ஏற்பு
திண்டுக்கல் தொகுதியை பொறுத்தவரையில் 35 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 25 மனுக்கள் ஏற்கப்பட்டது 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு ஒரு மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் சசிகலா கட்சியான அஇபுதமமுக வேட்பாளர் ராமுதேவர் மனு ஏற்று கொள்ளப்பட்டது. இவர்களின் கூட்டணியில் உள்ள ராமதாஸ் அணியை சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவரின் மனுவும் ஏற்கப்பட்டது.

இரண்டு கட்சிகளின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளதால் யார் வாபஸ் பெறுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சசிகலா திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, திண்டுக்கல் தொகுதியில் நாளை பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அவர் எந்த வேட்பாளருக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார் என்பது சசிகலா கட்சியினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

* வேட்புமனு நிராகரிப்பு சுயேச்சை வேட்பாளர் நடுரோட்டில் படுத்து மறியல்
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்பு மனுக்கள் பரிசீலனை, கோவை பேரூர் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை எனக்கூறி சுயேச்சை வேட்பாளர் தலித் ஜெயராஜ் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதனால், ஆத்திரம் அடைந்த அவர், பேரூர்-சிறுவாணி மெயின் ரோட்டில் படுத்து உருண்டு, மறியல் போராட்டம் நடத்தினார்.

இதனால் அங்கு போக்குவரத்து தடைபட்டது. இதையடுத்து, போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அமைதியான முறையில் அதிகாரிகளிடம் மேல்முறையீடு செய்ய வேண்டுமே தவிர, சாலையில் படுத்து, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.

* ராக்கெட் ராஜா, ஹரிநாடார் வேட்பு மனுக்கள் தள்ளுபடி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் பனங்காட்டு படை கட்சி சார்பில் ஆறுமுக பாண்டியன் என்ற ராக்கெட் ராஜா, சுயேச்சையாக ஹரி நாடார் உள்பட மொத்தம் 29 பேர் வேட்பு மனு தாக்கல் ெசய்திருந்தனர். நேற்று வேட்பு மனு பரிசீலனையில் திமுக, அதிமுக உள்பட 13 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. ஹரிநாடார், ராக்கெட் ராஜா உள்பட 16 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

* கொலை, ஆள்கடத்தல் வழக்கில் தொடர்புடைய 2 பேர் தவாக வேட்பாளர்கள்
சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் பிரபல ரவுடி கோழி பாஸ்கர். இவர் மீது சேலம் மாநகரில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை வழக்கும் பதிவாகியுள்ளது. சேலம் செவ்வாய்பேட்டையில் கூலிப்படையாக செயல்பட்டு ஒருவரை கார் ஏற்றி கொன்ற வழக்கிலும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் சேலம் தெற்கு தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேட்பாளராக வேட்பு மனுத்தாக்கல் செய்தார். 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட இவர் மீது 2024ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்று விசாரணையில் உள்ளது.

இதேபோல தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில இளைஞரணி துணை செயலாளரான இளம்பிள்ளையை சேர்ந்த பிரம்மமூர்த்தி என்பவர் வீரபாண்டி தொகுதியில் போட்டியிடுவதற்கு மனுத்தாக்கல் செய்துள்ளார். இவர் மீது மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில், வீடு புகுந்து திருடுவது, வழிப்பறி, அடிதடி, கொலை முயற்சி உள்பட 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரும்பாலை போலீசார் ஆள்கடத்தல் வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். குற்றவழக்கு பின்னணியில் உள்ள தவாக வேட்பாளர்கள் இருவரும் வேட்பு மனுத்தாக்கல் செய்ததால், மாநகரம் மற்றும் மாவட்ட போலீசார் வியப்பில் ஆழந்தனர். இவர்களது வேட்புமனு ஏற்கப்பட்டது. பொதுமக்கள் மட்டும் இன்றி போலீஸ் வட்டாரத்திலேயே இவர்களின் வேட்புமனு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chidambaram Thaveka ,Sengottaiyan ,Thaveka ,Sasikala ,Chennai ,Tamil Nadu Assembly ,DMK ,AIADMK ,NDA ,Chidambaram ,
× RELATED பெண்ணின் குடும்பத்தை ஊரைவிட்டு...