×

தமிழ்நாட்டையும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் பார்த்து பாஜ தலைவர்கள் பயப்படுகிறார்கள்: திமுக எம்பிக்கள் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டையும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் பார்த்து பாஜ தலைவர்கள் பயப்படுகிறார்கள் என்று திமுக எம்பிக்கள் கூறினர். திமுக எம்பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பாஜ வேட்பாளர் வெற்றி பெற்றவுடன் மெட்ரோ திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று சொல்லியிருக்கிறார். இந்த விவகாரத்தில் தனது மிக கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இங்கு ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும், முதல்வரும் இருக்கிறார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற முதல் நாளிலிருந்து இத்திட்டம் குறித்து என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பது குறித்த தேதி வாரியான விவரங்கள் எங்களிடம் உள்ளன. மே 7, 2021 அன்று பதவி ஏற்ற உடனேயே, மதுரை மெட்ரோ திட்டத்தை மீண்டும் உடனடியாக தொடங்குவதாக அறிவித்து, அதற்கான வழிகாட்டுதல்களை அவர் வெளியிட்டார்.

தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கு தேவையான அனைத்துத் தொழில்நுட்ப, நிர்வாக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. 11,368 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இத்திட்டத்தின் மாநில அளவிலான அனைத்துப் பூர்வாங்க பணிகளும் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன. குறிப்பாக, செப்டம்பர் 6, 2025 அன்று சி.எம்.ஆர்.எல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணைந்து திருமங்கலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, சுரங்கப்பாதை சீரமைப்பு பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டுள்ளனர். திராவிட மாடல் நாயகர் பொறுப்பேற்றவுடன் இவை அனைத்தும் முறையாக திட்டமிடப்பட்டு, பணிகள் அனைத்தும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இவ்வளவு ஆக்கப்பூர்வமான வேலைகள் நடந்திருக்கும் நிலையில், இவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, எங்களுடைய உறுப்பினரை தேர்ந்தெடுத்தால் தான் இதை செய்வோம் என்று கூறுவது அப்பட்டமான பிளாக்மெயில் அரசியல். முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர் இத்தனை பணிகளைச் செய்திருக்கும்போது, எதன் அடிப்படையில் நீங்கள் அதனை உதாசீனப்படுத்துகிறீர்கள்? நவம்பர் 18, 2025 அன்று, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 20 லட்சத்தை எட்டவில்லை எனக் கூறி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ திட்ட அறிக்கைகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.

ஆனால், ஆக்ரா, பாட்னா, போபால் போன்ற வட இந்திய நகரங்களில் மக்கள் தொகை குறைவாக இருந்தபோதே, மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி கொடுத்து கட்டுமானப் பணிகளை தொடங்கியுள்ளீர்கள். தமிழ்நாட்டின் மதுரை என்று வரும்போது மட்டும் 15.6 லட்சம் மக்கள் தொகையை காரணம் காட்டி நிராகரிப்பது மத்திய அரசின் இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது. இது தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழர்களுக்கும் இழைக்கப்படும் பெரும் துரோகமாகும்.

மகாராஷ்டிரா முதல்வர் இங்கு வந்து இத்தகைய வாக்குறுதிகளை அளிப்பதன் பின்னால் உள்ள அரசியல் பின்புலத்தை நாம் உணர வேண்டும். இதையேதான் முதல்வர் மு.க.ஸ்டாலின், இது என்.டி.ஏ vs மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பதைக் காட்டிலும், டெல்லி vs தமிழ்நாடு இடையிலான தேர்தல் என்று சுட்டிக்காட்டுகிறார். தேவேந்திர பட்னவிஸின் இன்றைய பேச்சே அதற்கு சிறந்த உதாரணமாகும். தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வராக இருந்தபோது, அங்கிருந்த பல லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் குறிப்பாக பாக்ஸ்கான், டாடா ஏர்பஸ், மெடிக்கல் பார்க் போன்றவை குஜராத்திற்கு மாற்றப்பட்டன.

சொந்த மாநில உரிமைகளை அடகு வைத்தவர்தான் இன்று தமிழ்நாட்டிற்கு வந்து வாக்குறுதி அளிக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிமுடிக்கப்படவில்லை. அங்கு பயிலும் மாணவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில்தான் படிக்க வேண்டிய அவலநிலை உள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தும் தமிழகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. மாறாக நீட், உதய் திட்டம், விவசாயச் சட்டங்கள், சிஏஏ போன்ற தமிழ்நாட்டிற்கு எதிரான திட்டங்களுக்கு அதிமுக துணை நின்றது.

அதிமுக ஆட்சியில் இருந்தபோதும், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் போராடி சிறை சென்றது திமுகதான். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இந்தியாவின் மாநில சுயாட்சி மற்றும் மதச்சார்பற்ற தன்மையைப் பாதுகாக்கும் முதன்மை தலைவராக திகழ்கிறார். அவரைப் பார்த்து ஒன்றிய அரசு பயப்படுவதால்தான் ஒட்டுமொத்த அமைச்சரவையும் தமிழ்நாட்டில் முகாமிட்டுள்ளது.ராமாயணத்தில் குதிரையை ஏவி நாடுகளை பிடிப்பது போல, பாஜ தமிழ்நாட்டு எல்லை வரை வந்து நிற்கிறது. ஆனால், இது பெரியார், அண்ணா, கலைஞர் கட்டிக்காத்த திராவிடக் கோட்டை.

இதை தாண்டி அவர்களால் உள்ளே வர முடியாது. இங்கு திமுக கூட்டணியே வலுவாக உள்ளது. நாங்கள் இங்கு கவனித்துக் கொள்கிறோம், நீங்கள் மற்ற மாநிலங்களில் கவனம் செலுத்துங்கள் என்ற பரஸ்பர புரிதலின் அடிப்படையிலேயே காங்கிரஸ் தேசிய தலைவர்கள் இங்கு வரவில்லை. கடந்த முறை ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாரை ஒரு சாதாரண தொண்டரை வைத்தே திமுக தோற்கடித்தது.

எனவே, தமிழ்நாட்டில் டெல்லி தலைவர்களின் தயவு இன்றி எங்களால் வெற்றி பெற முடியும். அம்பேத்கர் பெயர் என்றும் நிலைத்திருக்க அவரது அரசியலமைப்புச் சட்டமே சாட்சி. அம்பேத்கரின் நூல்களை மொழிபெயர்ப்பது, பட்டியலின மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் தாண்டி திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்குவது என அவரது பெயரில் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருவது திராவிட மாடல் அரசுதான். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : BJP ,Tamil ,Nadu ,Chief Minister ,MK Stalin ,DMK MPs ,Chennai ,DMK ,Tamil Nadu ,Tamilachi Thangapandian ,Kalanithi Veerasamy ,Anna ,Arivalayam ,Maharashtra ,Devendra Fadnavis… ,
× RELATED தமிழகத்தின் கோடீஸ்வர வேட்பாளர்:...