×

வழக்கை மறைத்து தவறான பிரமாண பத்திரம் தாக்கல் கே.சி.வீரமணி வேட்புமனுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை தாக்கிய அதிமுகவினர்: 5 பேர் கைது, 50 பேர் மீது வழக்கு

நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் கே.சி.வீரமணி தாக்கல் செய்த பிரமாண பத்திரம் பொய்யானது என ஆட்சேபனை தெரிவித்த நபர்களை தாக்கிய அதிமுகவினர் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், வேட்பாளர் உட்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி தமிழகத்தில் அனைத்து கட்சி வேட்பாளர் கடைசி நாளான நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அதன்படி, ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சரும், அதிமுக திருப்பத்தூர் மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி, நாட்றம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவ்வாறு வேட்பு மனு தாக்கல் செய்த கே.சி.வீரமணி, பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளாராம். இதையறிந்த வேலூரை சேர்ந்த தொழிலதிபர்களான, ஜெயபிரகாஷ் மற்றும் ராமமூர்த்தி ஆகியோர், கே.சி.வீரமணி தாக்கல் செய்த பிரமாண பத்திரம் பொய்யானது என நேற்று மனு அளிக்க நாட்றம்பள்ளி தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர்.

இதையறிந்த கே.சி.வீரமணி, அவரது ஆதரவாளர்களுடன் நாட்றம்பள்ளி தாலுகா அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அங்கிருந்த ஜெயபிரகாஷ் மற்றும் ராமமூர்த்தி ஆகியோரை வீரமணியின் ஆதரவாளர்கள் கைகளால் சரமாரியாக தாக்கினார். மேலும், தாலுகா அலுவலகத்தில் உள்ள பிளாஸ்டிக் சேர்களால் இருவரையும் தாக்கினர். இதில் இருவரும் காயமடைந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், ராமமூர்த்தி மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோரை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நிலம் வாங்குவது தொடர்பாக, பணம் மோசடி செய்துள்ளதாகவும், ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கூறினர். மேலும், வரும் தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, தவறான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாகவும், அதற்கு ஆட்சேபனை தெரிவித்து மனு அளிக்க நாட்றம்பள்ளி தாலுகா அலுவலகத்திற்கு வந்தபோது வீரமணியின் ஆதரவாளர்கள் தங்களை தாக்கியதாகவும் புகார் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து அறிந்த திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் யாஷா முக்தால் மற்றும் திருப்பத்தூர் எஸ்பி சியாமளா தேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், அங்கிருந்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் தேர்தல் பொது பார்வையாளர் யாஷா முக்தால் நிருபர்களிடம் கூறுகையில், ‘நாட்றம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் நடந்த சம்பவம் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனை கண்காணித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறையினர் தரும் அறிக்கையை வைத்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இச்சம்பவம் குறித்து வட்டாட்சியர் காஞ்சனா நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியின் ஆதரவாளர்களான சுசிகரன்(39), திருமூர்த்தி(29), ஜெயபிரகாஷ்(28), மகாலிங்கம்(60), பிரபு(47) ஆகிய 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருப்பத்தூரில் உள்ள சிறையில் அடைத்தனர். இதற்கிடையே தாக்குதலில் பாதிக்கப்பட்ட ராமமூர்த்தி நேற்று மாலை நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags : AIADMK ,K.C. Veeramani ,Natrampalli ,Natrampalli taluka ,
× RELATED பெண்ணின் குடும்பத்தை ஊரைவிட்டு...