×

தமிழகத்தின் கோடீஸ்வர வேட்பாளர்: அதிமுக லீமா ரோசுக்கு ரூ.1,048 கோடி சொத்து; குடும்பத்தின் சொத்து ரூ.5,860 கோடி

திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் லீமாரோஸ் போட்டியிடுகிறார். 58 வயதாகும் லீமா ரோஸ், நேற்றுமுன்தினம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இத்துடன் இணைக்கப்பட்ட பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்கள் தெரிவித்து உள்ளார்.

அதன் விவரங்கள் வருமாறு:
தங்கம் 19,233.398 கிராம் (மதிப்பு ரூ.26 கோடியே 29 லட்சத்து 20 ஆயிரத்து 551), வைரம் 1217.477 கேரட் (மதிப்பு ரூ.15 கோடியே 48 லட்சத்து 98 ஆயிரத்து 419), வெள்ளி 1,31,813.15 கிராம் (மதிப்பு ரூ.3 கோடியே 29 லட்சத்து 53ஆயிரத்து 288), பிளாட்டினம் 32.07 கிராம் (மதிப்பு ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 916). அசையும் சொத்துகள் ரூ.139 கோடியே 62 லட்சத்து 98 ஆயிரம். அசையா சொத்துக்கள் விவசாய நிலம், விவசாயத்திற்கு அல்லாத நிலம், வணிக கட்டிடங்கள், குடியிருப்பு கட்டிடங்கள் என மொத்தமாக ரூ.910 கோடி உள்ளதாக தெரிவித்துள்ளார். வங்கி கடன்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட மற்ற நிதித்துறைகளில் கடனாக ரூ.8 கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 897. வருமான வரி நிலுவை பாக்கி ரூ.86 லட்சத்து 76 ஆயிரத்து 780.

லால்குடி ஸ்டேட் பாங்க் கணக்கில் 80 ஆயிரம் உட்பட 13 வங்கி கணக்குகளில் ரூ.50 லட்சத்து 10 ஆயிரத்து 855 உள்ளது. முக்கியமாக, 298க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் சுமார் ரூ.45 கோடி முதலீடு செய்துள்ளார். கடந்த 2020-21ம் ஆண்டு வரை 1 கோடியே 2 லட்சத்து 73 ஆயிரமும், 2021-22ல் 1 கோடியே 7 லட்சத்து 13 ஆயிரமும், 2022-23ல் ரூ.1 கோடியே 66 லட்சத்து 55 ஆயிரமும், 2023-24 1 கோடியே 2 லட்சத்து 5 ஆயிரமும், 2024-25ல் ரூ.9 கோடியே 82 லட்சத்து 44 ஆயிரம் வருவாய் தெரிவித்துள்ளார்.

இதைப்போல், லீமா ரோஸின் கணவரும், பிரபல லாட்டரி அதிபருமான மார்ட்டின் சொத்து மதிப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்டினுக்கு கையிருப்பு பணமாக ரூ.56 லட்சத்து 48 ஆயிரத்து 476. 281.210 கிராம் தங்கமும் (மதிப்பு ரூ.38 லட்சத்து 44 ஆயிரத்து 141), வைரம் 9.83 கேரட் (ரூ.2 லட்சம் 94 ஆயிரம்), வெள்ளி 20974.50 கிராமும் (மதிப்பு ரூ.52 லட்சத்து 43 ஆயிரத்து 625). 321 கிராம் முத்துக்களும் (மதிப்பு ரூ.10 லட்சத்து 23 ஆயிரத்து 916). அசையும் சொத்துக்களாக ரூ.3 ஆயிரத்து 262 கோடியே 1 லட்சத்து 5 ஆயிரம். அசையா சொத்துகளாக ரூ.887 கோடியே 36 லட்சத்து 49 ஆயிரத்து 935. அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கியாக ரூ.29 லட்சத்து 23 ஆயிரத்து 452. வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்களிடமிருந்து ரூ.325 கோடியே 7 லட்சத்து 13 ஆயிரம் வரை கடனாக பெற்றுள்ளார். வருமானவரி பாக்கி ரூ.75 கோடியே 66 லட்சத்து 3 ஆயிரத்து 627.

லீமா ரோசின் மகன் ஜோஸ் டைசன் மார்ட்டின் கையிருப்பாக ரூ.6 லட்சத்து 74 ஆயிரத்து 267. கையிலும், தங்கமாக 326.644 கிராம் (மதிப்பு ரூ.44 லட்சத்து 65 ஆயிரம்), வைரம் 60.42 கேரட் (மதிப்பு ரூ.60 லட்சத்து 33 ஆயிரத்து), வெள்ளி 60380.300 கிராம் (மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சத்து 95 ஆயிரத்து 75 கிராமும்), கைக்கடிகாரம் (ரூ.7 லட்சத்து 50 ஆயிரம்), அசையும் சொத்துகள் ரூ.225 கோடியே 56 லட்சத்து 17 ஆயிரத்து 553, அசையா சொத்து ரூ.437 கோடியே 71 லட்சத்து 70 ஆயிரத்து 64ம், அரசுக்கு அளிக்க வேண்டிய பாக்கி 1 லட்சத்து 85 ஆயிரத்து 670, கடனாக வங்கி மற்றும் மற்ற நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடன் ரூ.6 கோடியே 23 லட்சத்து 31 ஆயிரத்து 109, வருமான வரி பாக்கி ரூ.66 லட்சத்து 98 ஆயிரத்து 496.

மேலும், லீமா ரோஸ்க்கு மதுரை, பொள்ளாச்சி, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் நிலங்கள் உள்ளன. மார்ட்டினுக்கு கோவை, டெல்லி, கேரளம், திருப்பூர், பொள்ளாச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் நிலங்கள் உள்ளது. மகன் ஜோஸ் டைசனுக்கு கோவை, செங்கல்பட்டு, சென்னை அம்பத்தூர், சென்னை கோடம்பாக்கம் உள்ளிட்ட நிலங்கள், வணிக கட்டிங்கள், குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளன. மொத்தத்தில் லீமா ரோசின் அசையும் சொத்து ரூ.139 கோடியே 62 லட்சம், அசையா சொத்து சுமார் ரூ.909 கோடி 94 லட்சம், மார்ட்டின் அசையும் சொத்து ரூ.3,262, அசையா சொத்து ரூ.887 கோடி, மகன் ஜோஸ் டைசன் பெயரில் அசையும் சொத்து ரூ.225 கோடி, அசையா சொத்து ரூ.437 கோடியும் உள்ளது. லீமா ரோஸ் குடும்பத்திற்கு சுமார் ரூ.5,860 கோடியில் சொத்துக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த லீமா ரோஸ்..?
கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின். சாதாரண கூலி தொழிலாளி தொடங்கிய இவரது வாழ்க்கை இன்று சர்வதேச தொழிலதிபராக உள்ளார். லாட்டரியில் தொடங்கிய தொழில் இன்று பல்வேறு துறைகளில் கால் பதித்து உள்ளார். இவரது மனைவிதான் லீமா ரோஸ். இவர் ஐஜேகேவில் இருந்து விலகி சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் சேர்ந்த ஒரே வாரத்தில் மகளிரணி இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 6ம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ள இவர், முதலில் திருவாடானை தொகுதியை கேட்டு வந்த லீமா ரோஸ், இறுதியில் லால்குடி தொகுதியை பெற்றார். இவர், பல தொகுதிகளுக்கு தேர்தல் செலவை ஏற்பதாக எடப்பாடியிடம் உறுதியளித்து உள்ளதாக கூறப்படுகிறது. இவர் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின், புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி தொடங்கிய என்டிஏ கூட்டணியில் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தனக்கு ரூ.597 கோடி சொத்து உள்ளதாக வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார். லீமோ ரோஸ் மருமகன் ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடுகிறார். இவர் தனக்கு ரூ.197 கோடொ சொத்தும், தனது மனைவிக்கு ரூ.245 கோடி சொத்தும் உள்ளதாக வேட்பு மனுவில் தெரிவித்து உள்ளார்.

லீமா ரோஸ் மீது பணமோசடி வழக்கு
அதிமுக லால்குடி தொகுதி வேட்பாளர் லீமாரோஸ் மீது கடந்த 2002ம் ஆண்டு நிறுவனங்களின் இயக்குனர் என்ற முறையில் பல்வேறு கணக்கில் வராத நிதிகளை அடமானம் இல்லாத கடன் பெற்றதாக கூறி நிலங்கள் வாங்க நிதியை பயன்படுத்தியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதியை பெற்று அதை வெளிநாடுகளுக்கு அனுப்பி தவறான தகவல்களை அளித்து வருவாய் ஆதாரத்தை மறைத்தற்காக கடந்த 2007 -08, 2008-09 மற்றும் 2009-10 ஆகிய ஆண்டுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தபோது அதை எடுத்துவந்த நபர், அந்த நிதிக்கு உரியவர் லீமா ரோஸ் மற்றும் அவரது கணவர் மார்ட்டின் என வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து கடந்த 2013ம் ஆண்டு லீமா ரோஸ் மற்றும் அவரது கணவன் மார்ட்டின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை லீமா ரோஸ் மற்றும் அவரது கணவர் மார்டின் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

கோவையின் பணக்கார வேட்பாளருக்கு ரூ.147 கோடிக்கு சொத்து
கோவை அதிமுகவில் பணக்கார வேட்பாளர் ஒருவர் களம் காண்கிறார். அவர் தான் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம். இவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார், வால்வோ கார், பென்ஸ்,பிஎம்டபிள்யூ, ரூ.62 லட்சம் மதிப்பிலான தங்கம் உட்பட ரூ.87 கோடியே 86 லட்சத்து 21 ஆயிரத்து 121-க்கு அசையும் மற்றும் அசையா சொத்துகள் என மொத்தம் ரூ.147 கோடிக்கு சொத்து வைத்துள்ளதாகவும்,ரூ.66 கோடி கடன் இருப்பதாகவும் தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான எஸ்.பி.வேலுமணியை விட (ரூ.8.15 கோடி சொத்து) அதிக சொத்து மதிப்பை கொண்டுள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிட்டிங் எம்எல்ஏ-வான இவரின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டில் பல மடங்கு உயர்ந்துள்ளது.

Tags : Tamil Nadu ,AIADMK ,Leema Rose ,Lalgudi ,Trichy district ,
× RELATED வில்லிவாக்கத்தில் சுயேச்சை...