- தின மலர்
- எடப்பாடி
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- சேலம் மாவட்டம்
- அருன் குமார்
- தவெகா
- விஜய்
- அயோத்தியபட்டினம்
- ஏற்காடு
சேலம் மாவட்டம் இடைப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். நடிகர் விஜய்யின் தவெக வேட்பாளராக அருண்குமார் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதிமுகவை சேர்ந்த இவர், ஏற்காடு தொகுதிக்குட்பட்ட அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய குழு உறுப்பினராக இருந்தவர். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தவெகவில் சேர்ந்த நிலையில், இடைப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இக்கட்சியின் தலைவர் விஜய், அதிமுக ஒரு ஊழல் கட்சி எனவும், இத்தேர்தல் களத்தில் அதிமுக இல்லை எனவும் கடுமையாக குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, விஜய்க்கு அரசியலில் எதுவுமே தெரியாது என பதிலடி கொடுத்தார். அதற்கு இடைப்பாடி தொகுதியில் வேட்பாளரை நிறுத்தி சரியான பாடம் கற்பிக்கப்படும் என விஜய் கூறினார்.
ஆனால் தனக்கு எதிராக தவெகவே போட்டியிட கூடாது என்பதில் தீவிரமாக இருந்த எடப்பாடி பழனிசாமி அதற்கான வேலையிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வேட்புமனு கடைசி நாளில் அவரது சட்ட நிபுணர்களை களம் இறக்கினார். அவர்களும் என்ன செய்ய வேண்டுமோ? அதனை வெற்றிகரமாக செய்தனர். அதேநேரத்தில் வேட்பாளர் அருண்குமார், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவனின் தீவிர ஆதரவாளர் என தவெகவினர் ஆரம்பத்திலேயே சந்தேகப்பட்டனர். அவர் எடப்பாடி பழனிசாமி பக்கம் போய்விடுவார் என சந்தேகம் எழுப்பினர். இதனால் இடைப்பாடி தொகுதி தவெகவினர் கடும் குழப்பத்திலேயே இருந்து வந்தனர். இதுதொடர்பாக கடந்த 1ம் தேதி `தினகரன் நாளிதழில்’ “எடப்பாடிக்கு எதிராக களம் இறங்கும் இடைப்பாடி தவெக வேட்பாளர் பல்டி அடிப்பாரோ என கலக்கம்’ என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது.
இந்நிலையில் நேற்று வேட்புமனு பரிசீலனை நடந்தது. இதில் தவெக வேட்பாளர் அருண்குமாரும் கலந்து கொண்டார். திடீரென கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், மீண்டும் திரும்பி வரவில்லை. அவர் எங்கே போனார் என்று தெரியவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டது. வேட்புமனு பரிசீலனையில், 10 பேர் முன்மொழிவுக்கு பதிலாக 8 பேரும், மாற்று வேட்பாளரான அவரது மனைவி நித்யாவுக்கு 7 பேரும் முன்மொழிந்திருந்தனர். இதையடுத்து தவெக வேட்பாளர் அருண்குமாரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் தவெக தொண்டர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். வேட்பாளரும் அங்கு இல்லாததால் கோபம் அடைந்த அவர்கள் வேட்பாளர் விலை போய் விட்டார் என கோஷமிட்டனர். அவரை கடத்தி சென்று விட்டனர் என்றும் குமுறினர். அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வேட்பாளர் அருண்குமார் செயல்பட்டுள்ளார் என்ற தகவல் தலைமை நிலைய ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனுக்கு தெரியவந்தது. அவர் முன்னாள் எம்எல்ஏ எஸ்.இ.வெங்கடாசலத்தை இடைப்பாடிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் வேட்பாளர் இல்லாததால் அவரும் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘வேட்பாளர் அருண்குமார் காலையில் வந்திருந்தார். கழிவறைக்கு செல்வதாக கூறி சென்றவரை காணவில்லை. அவரை யாராவது கடத்தி சென்றார்களா? என்பதும் தெரியவில்லை. இடைப்பாடி தொகுதியில் தவெகவிற்கு 30 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தால், என்னென்ன தவறு இருக்கிறது என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். தவறு இருந்தால் அதனை திருத்தித்தருமாறு கேட்பார்கள். ஆனால் அவர் தாக்கல் செய்த மனுவை அதிகாரிகள் திட்டமிட்டு பெற்றுள்ளனர். இதில் பெரும் கூட்டுச்சதி இருக்கிறது’’ என்றார்.
தவெக வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டதன் மூலம், அதன் தலைவர் விஜய்க்கு எடப்பாடி சரியான பதிலடி கொடுத்துவிட்டதாக அதிமுகவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ஆனால் தவெக தொண்டர்களோ, ஏற்காடு தொகுதியை சேர்ந்தவருக்கு இடைப்பாடியில் சீட் கொடுக்கும்போதே எங்களுக்கு சந்தேகம் எழுந்தது. திட்டமிட்டே அதிமுகவினர் தவெகவில் சேர வைத்து, பல கோடி செலவு செய்வேன் என தலைமையிடம் கூறி வேட்பாளராக சீட் வாங்க வைத்துள்ளனர். அதன்படியே அவர்கள் வேட்பாளரை விலைக்கு வாங்கி விட்டனர். இது விஜய் மீது எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் பயத்தையே காட்டுகிறது’ என்றனர்.
