- அஇஅதிமுக
- முடுகுலா…
- என்.ஆர். முடுகுலா…
- பாஜக
- உதயநிதி ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- துணை முதலமைச்சர்
- மரப்பாலம் சந்திப்பு
- திமுக
- புதுச்சேரி
- பாஜக…
புதுவையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மரப்பாலம் சந்திப்பில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரி எப்போதும் வெறுப்பு அரசியலுக்கு இடம் கொடுக்காது. இது அன்பான மண். இந்த மண்ணில் பாசிச பாஜக சக்திகளின் ஊடுருவல் அதிகமாகிவிட்டது. பாஜ மக்கள் விரோத திட்டங்களை சோதித்து பார்க்கும் இடமாக புதுச்சேரியை மாற்றி கொண்டு இருக்கிறது. புதிய கல்வி கொள்கைகளை புதுவையில் அமல்படுத்தி உள்ளார்கள்.
புதிய கல்வி கொள்கை மூலமாக குலக்கல்வி கொள்கையை மீண்டும் அமல்படுத்தி உள்ளார்கள். தமிழ்நாட்டில் பாஜவின் எந்த சதி திட்டங்களையும் உள்ளே நுழைய விடாமல் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தடுக்கிறார். இந்த முறை புதுச்சேரி மண் சுயமரியாதையுடன் இருக்கக் கூடிய மண் என்பதை நாம் நிரூபித்து காட்ட வேண்டும். டபுள் இன்ஜின் சர்க்காரினால் புதுச்சேரியில் ஏதாவது வளர்ச்சி திட்டம் வந்துள்ளதா? புதுச்சேரிக்கு ஏதாவது உரிமைகள் வந்திருக்கிறதா? தமிழ்நாட்டில் திராவிட மாடல் சிங்கிள் இன்ஜின் ஆட்சியில் முதன் முறையாக தமிழகத்தில் டபுள் டிஜிட்டில் 11.19 சதவீத வளர்ச்சியை கொடுத்துள்ளோம்.
தமிழ்நாட்டில் எப்படி அதிமுக தோளில் ஏறி நின்று பாஜ சவாரி செய்கிறதோ, அதேபோல், புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் தோளில் ஏறி பாஜ சவாரி செய்கிறது. புதுச்சேரி மக்கள் மீது ஒன்றிய அரசுக்கு உண்மையில் அக்கறை இருந்தால், மக்களின் நீண்ட வருட கோரிக்கையான மாநில அந்தஸ்து கொடுத்தார்களா? 16 முறை தீர்மானம் நிறைவேற்றியும் இதை செய்யவில்லை. மோடியால் செய்ய முடியாது என்று கிடையாது. செய்வதற்கு மனமில்லை.
எடப்பாடி பழனிசாமி மூலம் தமிழ்நாட்டை அவர்கள் கண்ட்ேராலில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எப்படி முயற்சி செய்கிறார்களோ, அதேபோல் புதுச்சேரியையும் அவர்களது கண்ட்ரோலில் வைத்து கொள்ள பாஜ நினைக்கிறது. புதுச்சேரியில் எப்போதும் ஆளுநர் கையில்தான் எல்லா அதிகாரமும் குவிந்து கிடக்கிறது. மாநில அந்தஸ்து வந்தால் ஆளுநருக்கு அந்த அதிகாரம் இல்லாமல் போய்விடும். ஆளுநரை வைத்தே புதுச்சேரியை ஆளலாம் என்று ஒன்றிய பாஜ அரசு நினைக்கிறது.
அதேபோல் எல்லா துறைகளிலும் ஊழல் நிறைந்திருக்கிறது.இந்த நிலைமையை மாற்றி நீங்கள் அனைவரும் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். வருகிற தேர்தலில் தமிழகத்தில் எப்படி தேஜ கூட்டணியை விரட்டி அடிக்க தயாராக இருக்கிறோமோ, அதேபோல் புதுச்சேரியிலும் தேஜ கூட்டணியை விரட்டி அடிக்க வேண்டும். இது பாஜவின் ஆணவத்துக்கு முடிவு கட்டுகிற தேர்தல் என்பதை மறந்து விடாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
