×

சசிகலா எனக்கு ரூ.52 லட்சம் கொடுத்தாங்க…. வேட்பாளர் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தொகுதியை சேர்ந்தவர் கு.அன்பழகன். இவர் கடந்த 2001ம் ஆண்டு அதிமுக சார்பில் நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் அவருக்கு தொடர்ந்து கட்சியில் பதவிகள் வழங்கப்படாத காரணத்தால் பாஜவில் இணைந்தார். இந்த தேர்தலில் பாஜ சார்பில் அவருக்கு நிலக்கோட்டையில் எம்எல்ஏ சீட் நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்த்து பணிகளை செய்து வந்தார். ஆனால் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அந்த நினைப்பிலும் மண்ணை அள்ளி போட்டு விட்டார்.

இதன் தொடர்ச்சியாக அன்பழகன் பாஜவில் இருந்து வெளியேறி சசிகலா புதிதாக துவங்கிய அஇபுதமமுகவில் இணைந்தார். மறுநாளே நிலக்கோட்டை தொகுதி வேட்பாளராக அன்பழகன் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் நிலக்கோட்டையில் அக்கட்சியின் வேட்பாளர் அறிமுகம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அன்பழகன் பேசுகையில், ‘‘அதிமுக சார்பில் 2001ம் ஆண்டு தேர்தலில் நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட போது எனக்கு சசிகலா வாய்ப்பு வழங்கியது மட்டுமின்றி தேர்தல் செலவுக்காக ரூ.50 லட்சம் முதலில் கொடுத்தார்.

அதை நான் 2 ஒன்றிய செயலாளர்களுக்கு பிரித்து கொடுத்தேன். தொடர்ந்து சசிகலா மீண்டும் எனது செலவுக்காக ரூ.2 லட்சம் கொடுத்தார்’’ என்றார். தேர்தலில் வேட்பாளர் செலவுக்காக அன்றைய காலகட்டத்திலேயே ரூ.52 லட்சம் சசிகலா கொடுத்ததாக பொது வெளியில் வேட்பாளர் பேசியது அக்கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் வேட்பாளருக்கு சசிகலா பணம் கொடுத்தது உண்மையாக இருந்தால் அவர் மீதும், அந்த பணத்தில் செலவு செய்து தேர்தலை சந்தித்த அன்பழகன் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த தேர்தலில் அவரை தகுதி நீக்கம் செய்து போட்டியிட அனுமதிக்க கூடாது என்றும், இது சம்பந்தமாக தேர்தல் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Sasikala ,Ku ,Anbazhagan ,Nilakottai ,Dindigul district ,AIADMK ,BJP ,BJP… ,
× RELATED சொல்லிட்டாங்க…