×

தேர்தலுக்காக கட்சிகள் அமைக்கும் தற்காலிக அலுவலகங்களை நிரந்தர கட்டிடங்களில் அமைக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு

சென்னை: சட்டமன்ற தேர்தலுக்காக கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் தற்காலிக அலுவலகங்களை நிரந்தர கட்டிடங்களில் அமைக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அலுவலகங்களை நிரந்தர கட்டிடங்களில் அமைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் இளங்கோ சார்பில் வழக்கறிஞர் டி.ஆர்.அருண்குமார், ஆஜராகி, தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்யவுள்ளோம். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். இதைக்கேட்ட நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து, அரவக்குறிச்சி வேட்பாளர் இளங்கோவின் சார்பில் அவரது பிரதிநிதி முத்துக்குமாரபார்த்திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், தேர்தல் பணிமனைகளை அனுமதி பெற்று கட்டப்பட்ட நிரந்தர கட்டிடங்களில்தான் அமைக்க வேண்டும் என்று வற்புறுத்த முடியாது. தேர்தல் காலம் என்பது குறுகிய காலம்தான். அதற்காக நிரந்தர கட்டிடங்களை தேடுவது மிகவும் கடினமானதாகும். வேட்பாளர்களை தொடர்பு கொள்ளவும், பிரச்சாரங்களை மேற்கொள்ளவும், விளம்பரம் தொடர்பான பொருட்களை வைக்கவும் அந்தந்த தொகுதியில் தேர்வு செய்யப்படும் இடங்களில்தான் தற்காலிக தேர்தல் அலுவலகங்களை அமைக்க முடியும். இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் தலையிடுவது அரசியல் கட்சிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே, தேர்தல் ஆணையத்தின் இந்த கட்டுப்பாடு உத்தரவு சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Electoral Commission ,Dimuka ,Chennai ,Chennai High Court ,Election Commission ,
× RELATED கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்...