புதுடெல்லி: தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு எதிராக ரூ.2983 கோடி வங்கி மோசடி உட்பட 7 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிபிஐ மூலமாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் இந்த 7 மோசடி வழக்குகள் குறித்தும் தீவிரவமாக விசாரணை நடத்தி வருவதாகவும், இதில் சில அரசு ஊழியர்களின் பங்களிப்பு குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாக சிபிஐ தெரிவித்து இருந்தது.
சிபிஐ மற்றும் அதன் நிதிசார் விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கைகளை ஆய்வு செய்த பின் உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் ‘‘மற்ற வழக்குகளிலும் ஏற்பட்ட இழப்புகள் பல ஆயிரம் கோடி ரூபாயை எட்டுகின்றன. இவை அனைத்தும் சேர்த்து மொத்தம் சுமார் ரூ.73006கோடி மதிப்பிலான மோசடி குற்றச்சாட்டுக்களாக அமைகின்றன. அரசு, நிதி நிறுவன அதிகாரிகள் விதிமீறல்கள், சட்டவிரோத செயல்கள் அல்லது கூட்டுச்சதி மற்றும் உடந்தையாக செயல்படுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தால் அவற்றை முழுமையாக வெளிக்கொண்டுவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
