பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு பையப்பனஹள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒன்றிய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) கீழ் இயங்கும் எரிவாயு விசையாழி ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இந்த ஆராய்ச்சி மையத்தின் அலுவலகத்திற்கு அடுத்தடுத்து சில வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன. அதில், ஆராய்ச்சி மைய வளாகத்திற்குள் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவை மதியம் 1.30 மணி அளவில் வெடிக்கும் என்றும் கூறப்பட்டு இருந்தது. தமிழ் மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த மின்னஞ்சலில், தமிழகத்தைச் சேர்ந்த செல்வாக்குமிக்க அரசியல் தலைவரின் பேரன் கடத்தப்படுவார் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
மின்னஞ்சல் குறித்து தகவல் அறிந்ததும், போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு படையினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அங்குள்ள ஒவ்வொரு பகுதியிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு அங்கு வெடிகுண்டுகள் எதுவும் சிக்காததால், அந்த மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து போலீசார் கூறுகையில், ‘இந்த போலி மின்னஞ்சல் மிரட்டலை விடுத்த மர்ம நபர் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் உள்ள ராணுவ பாதுகாப்பு நிறுவனங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர்.
