தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காலையில் ரூ.1120 குறைந்தது மாலையில் ரூ.1440 உயர்ந்தது: வெள்ளியும் கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை நேற்று காலையில் பவுனுக்கு ரூ.1120 குறைந்து, மாலையில் ரூ.1440 உயர்ந்தது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கம் விலை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில சமயங்களில் அதிரடியாக உயர்ந்தும் வருகிறது. இந்த நிலையில் வாரத்தின் தொடக்க நாளான நேற்று காலையில் குறைந்தது. அதாவது, நேற்று காலையில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13,810க்கும், பவுனுக்கு ரூ.1,120 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 10,480க்கும் விற்பனையானது.

இந்த மகிழ்ச்சியை நகை வாங்குபவர்கள் அனுபவிப்பதற்குள் மாலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,990க்கும், பவுனுக்கு ரூ.1,440 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11,920க்கும் விற்பனையானது. வெள்ளி விலை நேற்று காலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.255க்கும், பார் வெள்ளி ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனையானது. ஆனால் மாலையில் வெள்ளி விலை உயர்ந்தது. மாலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.260க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து பார் வெள்ளி ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனையானது.

Related Stories: