திருச்செந்தூர், ஏப். 6: திருச்செந்தூர் அருகே பைக் மீது அரசு பஸ் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார். நண்பர் படுகாயமடைந்தார். ஆறுமுகநேரி ஏஐடியூசி காலனியைச் சேர்ந்த வேலாயுதம் மகன் முகேஷ் கண்ணன் (27), தனியார் நிறுவன ஊழியர். இவரும், இவரது நண்பரான லட்சுமிபுரத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் சிவபிரசாத் (24) என்பவரும் நேற்று பிற்பகலில் பைக்கில் திருச்செந்தூர் – நாகர்கோவில் சாலையில் பரமன்குறிச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த வளைவில் எதிரே வந்த அரசு பஸ்சும், பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டதில் முகேஷ் கண்ணன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவபிரசாத் படுகாயங்களுடன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
