சவுதாம்ப்டன்: எப்ஏ கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று, பலம் வாய்ந்த ஆர்சனல் அணியை, 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சவுதாம்ப்டன் அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. கால்பந்து சங்க சேலஞ்ச் கோப்பை (எப்சி கோப்பை) கால்பந்து போட்டிகள் இங்கிலாந்தில் கடந்த 1871ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. நடப்பாண்டு தொடரில் நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் சவுதாம்ப்டன் – ஆர்சனல் அணிகள் மோதின. துவக்கம் முதல் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடி கோல் போடுவதில் முனைப்பு காட்டினர்.
போட்டியின் 35வது நிமிடத்தில் சவுதாம்ப்டன் அணியின் ராஸ் ஸ்டீவார்ட் முதல் கோல் போட்டு கரவொலி பெற்றார். இரண்டாம் பாதியில் ஆர்சனல் அணியின் விக்டர் கைகோரெஸ், 68வது நிமிடத்தில் அட்டகாசமாக பந்தை கடத்திச் சென்று கோலாக்கி போட்டியை சமன்படுத்தினார். போட்டியின் இறுதிக் கட்டத்தில் சவுதாம்ப்டனின் ஷியா சார்லஸ் 85வது நிமிடத்தில் அணியின் 2வது கோல் போட்டு முன்னிலைப்படுத்தினார். அதன் பின் கோல் விழாததால், 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடிய சவுதாம்ப்டன் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
