கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவனத்தில் ₹4.80 லட்சம் கையாடல்

கிருஷ்ணகிரி, பிப்.19: கிருஷ்ணகிரியில், தனியார் கோழித்தீவன நிறுவனத்தில் ₹4.80 லட்சம் கையாடல் செய்ததாக, முன்னாள் ஊழியர் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள சத்ய சாய் நகரில், தனியார் கோழித்தீவன விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு மேலாளராக பணியாற்றி வரும் நரசிம்மன்(38), கிருஷ்ணகிரி தாலுகா காவல்நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை கணக்குகளை சரிபார்த்தபோது, மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக எங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த வாகிப்மாலிக்(35) என்பவரிடம் விளக்கம் கேட்ட போது, பண்ணை உரிமையாளர்கள் தீவனத்திற்கான பணத்தை இன்னும் கொடுக்கவில்லை என தெரிவித்தார். இதனிடையே அவர் திடீரென வேலையை விட்டு நின்றுவிட்டார். அதன் பின்பு முழு கணக்கையும் சரிபார்த்ததில், கோழிப்பண்ணை உரிமையாளர்களிடமிருந்து பெற்ற தொகையில் ₹4 லட்சத்து 80 ஆயிரத்தை, வாகிப்மாலிக் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பணத்தை பெற்று தரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதன்பேரில், எஸ்.ஐ மோகன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Related Stories: