திருவனந்தபுரம்: மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் குறைக்கப்படும் என்று கூறப்படுவது பொய் பிரசாரம் என்று திருவல்லாவில் நடந்த பாஜ கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
இரண்டாம் கட்ட பிரசாரத்திற்காக பிரதமர் மோடி நேற்று கேரளா வந்தார். பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: வளர்ச்சியில் மற்ற மாநிலங்களை விட கேரளா மிகவும் பின்தங்கியுள்ளது. கிராமப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான சாலைகள் மிக மோசமாக உள்ளன. இங்கிருந்து அருகிலுள்ள கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி நிலைமையின் நிலை பரிதாபகரமாக உள்ளது. இதுவரை கேரளாவில் பாஜ அரசு வரவில்லை. ஆனாலும் கேரளாவின் வளர்ச்சிக்காக கிடைத்த எந்த வாய்ப்பையும் நாங்கள் வீணடிக்கவில்லை.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது கேரளாவுக்கு வழங்கிய நிதியை விட 5 மடங்கு நிதியை நாங்கள் அளித்துள்ளோம். கேரளாவில் இருந்து தொழில் தேடி வெளியேறும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஊழலும், மதவாதமும் ஒழிந்தால் மட்டுமே இங்கு வளர்ச்சி ஏற்படும். இதற்காக கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளை தோற்கடிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்தாலும் இளைஞர்கள் கேரளாவை நேசிக்கின்றனர். வளைகுடா நாடுகளில் இருந்து இங்கு பெருமளவு பணம் வருகிறது. ஆனால் வளைகுடா நாடுகளுடன் இருக்கும் உறவை மோசமாக்கும் வகையில் காங்கிரசின் நடவடிக்கைகள் உள்ளன.
கேரளாவில் இடதுசாரி கூட்டணி அரசின் கவுண்டவுன் தொடங்கிவிட்டது. இங்கு முதன் முதலாக பாஜ அரசு வரப்போகிறது. நான் இதற்கு முன்பு பலமுறை கேரளாவுக்கு வந்துள்ளேன். இப்போது நல்ல மாற்றம் தென்படுகிறது. இங்கு பாஜவுக்கு சாதகமான காற்று வீசுவதை நான் உணர்கிறேன். சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். எந்தக் காரணம் கொண்டும் நாடாளுமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்பட மாட்டாது.
மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகள் குறைக்கப்படும் என்று கூறப்படுவது பொய் பிரசாரம் ஆகும். எந்த மாநிலத்தின் தொகுதியும் குறைக்கப்பட மாட்டாது. 2029ல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அமல் படுத்தப்படும். வரும் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை இதற்கான விவாதம் நடைபெற உள்ளது.இவ்வாறு அவர் பேசினார். இதன் பின்னர் திருவனந்தபுரம் சென்ற பிரதமர் மோடி ரோடு ஷோவில் கலந்து கொண்டார். இதன் பிறகு திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார்.
