மேட்டுப்பாளையத்தில் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியில் மக்கள் திரளாக பங்கேற்க அழைப்பு

ஊட்டி, பிப்.19: மேட்டுப்பாளையத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பங்கேற்கும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர் முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 10 ஆண்டுகளாக ஊழலில் திளைக்கும் அ.தி.மு.க. அரசு கொள்ளை அடிப்பதிலேயே குறிக்கோளாக இருந்து மக்களுக்கு தேவையான எந்தவித பணிகளையும் செய்யவில்லை. இந்நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” எனும் மகத்தான திட்டத்தை அறிவித்து தமிழகத்திலுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து அவரவர் கோரிக்கைகளை பெற்று வருகிறார்.

பொதுமக்களின் கோரிக்கைகளை தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களில் நிறைவேற்றப்படும் எனக்கூறி இருப்பது பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது. இக்கூட்டங்களில் கூடும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் கோரிக்கை மனுக்களை நம்பிக்கையுடன் தலைவர் ஸ்டாலினிடம் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர் மற்றும் குன்னூர் தொகுதிகளை உள்ளடக்கிய மக்களை இன்று (19ம் தேதி) காரமடை உயர்நிலைப்பள்ளி அருகில் மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று சிறப்புரையாற்ற உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டத்திலிருந்து பொதுமக்கள் கடந்த ஒரு வாரமாகவே மாவட்ட அலுவலகத்திலும், அந்தந்த நகர, ஒன்றிய செயலாளர்களிடத்திலும் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வமுடம் தங்கள் பெயர்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள முக்கிய பிரச்னைகளை   மனுவாக குறிப்பிட்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு மதியம் 1 மணிக்கு வர வேண்டும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள் செய்து உதவிட வேண்டும்.

Related Stories: