7 நீதிபதிகள் சிறைபிடிக்கப்பட்ட விவகாரம்; மேற்குவங்க தலைமை செயலர் டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் கடிதம்: என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்தியில் திருப்பம்

புதுடெல்லி: மேற்கு வங்காளத்தில் நீதிபதிகள் சிறைபிடிக்கப்பட்ட விவகாரத்தை என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், தேர்தலை நியாயமாக நடத்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்) நடைபெற்று வருகிறது. கடந்த 1ம் தேதியன்று மால்டா மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த 3 பெண்கள் உள்ளிட்ட 7 நீதிபதிகளை கிராம மக்கள் சிறைபிடித்து வைத்தனர்.

பல மணி நேரமாக உணவு, தண்ணீர் இன்றி அதிகாரிகள் தவித்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, இது நீதியை நிலைநாட்டுவதை தடுக்கும் துணிச்சலான செயல் என்று கவலை தெரிவித்தது. மேலும் மாநில அதிகாரிகள் உரிய பாதுகாப்பு வழங்க தவறியது குறித்து தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கின் விசாரணையை என்.ஐ.ஏ. அமைப்புக்கு மாற்றி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கடந்த ஏப்ரல் 2ம் தேதியன்று உத்தரவிட்டார். அதன்படி என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழு நேற்று மேற்கு வங்காளம் விரைந்து விசாரணையை தொடங்குகிறது. இந்த விசாரணையின் முதற்கட்ட அறிக்கையை நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு 6ம் தேதியன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் மேற்கு வங்காள தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவில், ‘மேற்கு வங்காளத்தில் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும். வாக்குச்சாவடி கைப்பற்றுதல், வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் வாக்காளர்களைத் தூண்டுதல் போன்ற செயல்கள் இல்லாமல் தேர்தல் நடைமுறை அமைய வேண்டும். நீதிபதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான படைகளைத் தேர்தல் ஆணையத்திடம் கோரிப் பெற்றுப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர். வரும் 23 மற்றும் 29ம் தேதிகளில் மேற்குவங்கத்தில் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: