×

ஆறு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன் அதிமுகவினர் யாரும் வந்து நலம் விசாரிக்கவில்லை: முன்னாள் சபாநாயகர் தனபால் வருத்தம்

சென்னை: முன்னாள் சபாநாயகர் தனபால் வெளியிட்ட அறிக்கை: எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின்பு ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக் கொண்டு செயல்பட்டவன். 2001, 2011, 2016, 2021 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது ஆதிதிராவிடர் நலன், உணவு, கூட்டுறவு போன்ற இலாக்காக்களுக்கு என்னை அமைச்சராக நியமித்தனர். 2011ம் ஆண்டு என்னை பேரவைத் துணைத் தலைவராக்கி 2012ம் ஆண்டு பேரவைத் தலைவர் பொறுப்பினை எனக்கு வழங்கினர்.

2016ம் ஆண்டு 2வது முறையாக பேரவைத் தலைவர் பொறுப்பினை எனக்கு வழங்கினார்கள். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவன். இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, நீண்ட நாட்கள் பேரவைத் தலைவர் பதவியை வகித்தவன் என்ற பெருமையை எனக்கு வழங்கினார். இதனை நினைக்கும்போது எனது நெஞ்சம் நெகிழ்கிறது. இந்தச் சூழ்நிலையில், கடந்த ஆறு மாத காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் என்னை அதிமுக சார்பில் யாரும் வந்து பார்க்கவோ, தொலைபேசி மூலம் விசாரிக்கவோ இல்லை.

இந்தத் தருணத்தில், 1988ம் ஆண்டு எனக்கு விபத்து காரணமாக கால் முறிவு ஏற்பட்டபோது சம்பவ இடத்திற்கு நேரில் வந்து எனக்குத் தேவையான முதலுதவியை அளித்து என்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைத்துப் பார்த்தேன். என் கண்களில் நீர் ததும்புகிறது. தாயின் கருணைக்கு என்னுடைய கோடானுகோடி நன்றிகள், தாயில்லாத நிலையை நான் இப்போது உணர்கிறேன்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நான் வாய்ப்பு கேட்டேன் என்பது உண்மை. ஆனால், எனக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதில் எனக்கு வருத்தம் ஏதுமில்லை. உடல் நலம் குன்றியிருக்கும் என்னை வந்து பார்க்கவில்லை என்பதுதான் எனக்கு வருத்தம் அளிக்கிறது என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : AIADMK ,Former ,Speaker ,Dhanapal ,Chennai ,Former Speaker ,MGR ,Jayalalithaa ,Tamil Nadu Legislative Assembly ,Adi Dravidar Welfare, Food, and Cooperatives… ,
× RELATED டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில்...