×

தேர்தல் முடிவிற்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன்: செல்வப்பெருந்தகை எம்எல்ஏ பேட்டி

சென்னை: தேர்தல் முடிவிற்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக செல்வப்பெருந்தகை எம்எல்ஏ கூறினார். ஸ்ரீபெரும்புதூர் தனி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் செல்வப்பெருந்தகை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று மாலை மாங்காட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளை செல்வப்பெருந்தகை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:

பாஜ என்பது அதிமுகவின் முகமூடி அணிந்து கொண்டு தமிழ்நாட்டுக்குள் இறங்கி இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள். இந்த தலைமுறை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், பாஜ முகமூடியோடு இறங்கி இருக்கின்ற அதிமுகவை நாம் தோற்கடிக்க வேண்டும். தேர்தல் முடிவு வந்த பிறகு என்னுடைய முழுமையான பணி ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுக்கு மட்டும் தான். இரு ஆண்டுகள் தமிழக மக்களுக்கு பணி செய்ததுபோல், நாடாளுமன்ற தேர்தலில் நூற்றுக்கு, நூறு வெற்றி பெற்றதுபோல், இந்த தேர்தலிலும் நூற்றுக்கு நூறு வெற்றி பெறுவோம்.

ஒவ்வொரு பதவியில் இருந்து ஒவ்வொருவரும் விலகும்போது, மன நிறையோடு விலகுவார்கள். அதேபோல் நானும் மன நிறைவோடு தான் விலகுகிறேன். இனி முழுக்க, முழுக்க ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுக்காக உழைக்க தயாராக உள்ளேன். தமிழ்நாட்டு மக்களின் பிள்ளையாக இரண்டு ஆண்டுகள் இருந்தேன்.

இனி, தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டு பிள்ளையாக வேறு யாராவது வேலை செய்வார்கள். நான் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களின் பிள்ளையாக இருந்து பணி செய்வேன். சட்டமன்ற தேர்தல் முடிவிற்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தியிடம் தெரிவித்து விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.  செல்வப்பெருந்தகையின் இந்த பேட்டி தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tamil Nadu Congress ,MLA ,Chennai ,Congress party ,Dimuka Alliance ,Sriprahumutur ,
× RELATED டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில்...