×

தமிழகம் முழுவதும் புனித வெள்ளி அனுசரிப்பு: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

சென்னை: புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு சென்னையில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. புனித வெள்ளி என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வோராண்டும் அனுசரிக்கிற ஒரு தினமாகும். இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த பின்னர் 3ம் நாள் உயிர்பெற்றெழுந்த ஞாயிறான ஈஸ்டர் தின கொண்டாட்டத்திற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.

இவ்விழா பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெறும். கத்தோலிக்க ஆலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெறும்.

புனித வெள்ளி தினத்தையொட்டி சென்னையில் சாந்தோம் பேராலயம், ஜெமினி கதீட்ரல் தேவாலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், பெரம்பூர் மாதா தேவாலயம், ராயப்பேட்டை வெஸ்லி தேவாலயம், பாரிமுனை அந்தோணியார் தேவாலயம், சேலையூர் செயின்ட் மார்க் தேவாலயம், சந்தோஷபுரம் செயின்ட் லூக் தேவாலயம், பெரவள்ளூர் உயிர்த்த கிறிஸ்து தேவாலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, வழிபாடுகள் நடந்தன.

சாந்தோம், லஸ், பெரவள்ளூர், பெரம்பூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட ஆலயங்களில் இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது. புனித வெள்ளி நிகழ்ச்சியை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் ஒருசந்தி விரதம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Good Friday ,Tamil Nadu ,Chennai ,Christians ,Jesus Christ ,Jesus ,
× RELATED டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில்...