- மதுரை பொலிஸ்
- ஆணையாளர்
- அபிஷேக் தீட்சித்
- பிரதான தேர்தல் அதிகாரி
- சென்னை
- மார்க்சிஸ்ட்
- மாநில செயலாளர்
- பி.சண்முகம்
- மதுரை நகரம்
- பொலிஸ் ஆணையாளர்
சென்னை: பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அபிஷேக் தீட்சித் மதுரை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் அளித்த புகார் மனு: சட்டமன்ற தேர்தலையொட்டி, மதுரையில் தற்போது பணியாற்றி வரும் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மாற்றப்பட்டு, அபிஷேக் தீட்சித் ஐபிஎஸ் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பல்வேறு முறைகேடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் அபிஷேக் தீட்சித் மீது சுமத்தப்பட்டுள்ளதோடு, நிர்வாக ரீதியாக நடவடிக்கைகளுக்கும் உள்ளாகியிருக்கிறார். கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது பெரும் முறைகேடுகள், குறிப்பாக, இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் தொடர்பாக சட்ட விரோதமாக லஞ்சம் பெற்றார் எனும் குற்றச்சாட்டுகள் இவர் மீது இருந்துள்ளன.
2012ம் ஆண்டு மாவட்ட ஊழல் தடுப்பு ஆணையம் அவர் மீது நடத்திய சோதனையில், கணிசமான சொத்துகள் (சுமார் 2 கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி மற்றும் நில ஆவணங்கள்) கண்டெடுக்கப்பட்டன. இத்தகைய திட்டமிட்ட நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட இவர், செப்டம்பர் 2020ம் ஆண்டு உ.பி. அரசால் இடைநீக்கம் செய்யப்பட்டார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாகவும் இவர் மீது ஊழல் தடுப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இத்தகைய குற்றச்சாட்டுகள் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு உள்ளான பின்னர், சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு, தமிழ்நாடு பணிகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இத்தகைய ஒரு அதிகாரியை தேர்தல் பணியில் ஈடுபடுத்தினால், நியாயமான, வெளிப்படையான பணிகளை பெருமளவு பாதிக்கச் செய்யும். எனவே, அபிஷேக் தீட்சித் பணி மாற்றல் உத்தரவை உடனடியாக ரத்து செய்வதோடு, ஏற்கனவே பணியில் உள்ள லோகநாதன் பணியில் நீடிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மேலும் மதுரை, திருப்பரங்குன்றம் பிரச்னையை மையப்படுத்தி ‘கந்தன் முருகன் வாக்கு’ என்ற காணொலி சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காணொலி தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவிப்பதால் பாஜ தலைமை மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இந்த காணொலியை உடனடியாக சமூக வலைதளங்களிலிருந்து நீக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* ‘ஒன்றிய அரசின் தலையீடு’
ஒன்றிய அரசின் தலையீட்டால் தமிழக டிஜிபி திடீர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் ஒன்றிய பாஜ அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. இந்த பாரபட்சப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
