×

வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் ‘மிஸ்சிங்’ கட்சிக்காக மாநிலம் முழுவதும் ஒருவர் பணியாற்ற விரும்புவதை பாஜ பரிசீலிக்கும்: தமிழக பொறுப்பாளர் பியூஷ் கோயல் சூசகம்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜ வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இல்லாத நிலையில், கட்சிக்காக முழு அர்ப்பணிப்புடன் ஒருவர் பணியாற்ற விரும்புவதை பாஜ பரிசீலிக்கும் என்று தமிழக பாஜ பொறுப்பாளர் பியூஷ் கோயல் சூசகமாக பதிலளித்தார். ஒன்றிய அமைச்சரும், தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மிகுந்த அனுபவம் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படும் நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்று, என்டிஏ கூட்டணி தமிழகத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கும். மத்திய அளவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும், மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் நல்லாட்சி வழங்கப்படும். இரட்டை வளர்ச்சி, விரைவான முன்னேற்றம் மூலம் தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறந்த எதிர்காலம் உருவாக்கப்படும்.

விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள், சிறு தொழில் முனைவோர் மற்றும் வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் மாற்றத்தை எதிர்பார்த்து வருகின்றனர். மேலும், வேட்பாளர்கள் தேர்வு மாநில நிர்வாகத்தின் பரிந்துரைகள் மற்றும் ஒவ்வொருவரின் விருப்பத்தையும் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.

பாஜ வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இல்லாதது குறித்த கேள்விக்கு, ‘கட்சிக்காக முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒருவர், மாநிலம் முழுவதும் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். அதுகுறித்து கட்சி பரிசீலிக்கும் என அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமல் கூறினார். மேலும், பாஜ தேர்தல் அறிக்கையின் முதல் வரைவு தயாராகி இருப்பதாகவும், மத்திய தலைமையுடன் ஆலோசித்து விரைவில் வெளியிடப்படும், என்றார்.

Tags : Annamalai ,BJP ,Tamil Nadu ,Piyush Goyal ,Chennai ,Tamil Nadu assembly elections ,Union Minister ,Tamil Nadu… ,
× RELATED டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில்...