×

சமூக நீதியை அழிக்கும் பாஜவுக்கு ஜால்ரா போடும் பழனிசாமி 11வது தோல்வி ஸ்டிக்கர் ஒட்ட தயாராகிறார்: நெல்லை பிரசாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

நெல்லை: சமூக நீதியை அழிக்கும் பாஜவுக்கு ஜால்ரா போடும் பழனிசாமி 11வது தோல்வி ஸ்டிக்கர் ஒட்ட தயாராகிறார் என்று நெல்லை பிரசாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். நெல்லை பாளை. தெற்கு பைபாஸ் சாலை சரவணா ஸ்டோர்ஸ் எதிரில் உள்ள மைதானத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராதாபுரம் தொகுதியின் திமுக ேவட்பாளர் அப்பாவு, பாளையங்கோட்டை வேட்பாளர் அப்துல்வஹாப், நெல்லை வேட்பாளர் சுப்பிரமணியன், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அம்பை. காங். வேட்பாளர் வி.பி.துரை ஆகியோரை அறிமுகம் செய்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார் அப்போது அவர் பேசியதாவது:

10 ஆண்டு கால அதிமுகவின் ஆட்சியில் தமிழ்நாட்டின் நிர்வாகத்தை சீரழித்து முடக்கி படு பாதாளத்திற்குள் தள்ளியதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அந்த தமிழ்நாட்டை மீட்டெடுத்து, மக்களுக்கு புதிய விடியலை தந்து இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக் கொண்டிருக்கிறோம். இந்தியாவிலேயே பல மாநிலங்களுக்கு வழிகாட்டியாக உள்ள நமது ஆட்சிக்கு என்ன பெயர் என்பது உங்களுக்கு தெரியும். இந்தியாவே தெற்கே திரும்பி பார்க்கிறது. அந்த அளவுக்கு தமிழ்நாட்டை திரும்பி பார்க்க வைத்துள்ளோம்.

மலையளவு சாதனைகளை நமது திராவிட மாடல் ஆட்சியில் செய்துள்ளோம். ஆனால் எந்த சுய சிந்தனையும் இன்றி துரோகத்தின் மொத்த உருவமான, மக்களால் புறக்கணிக்கப்பட்ட 10 தோல்வி பழனிசாமி நமது திட்டங்களை காப்பி அடித்து புதிய ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இப்போது 11வது தோல்விக்கு ஸ்டிக்கர் ஒட்ட மக்கள் தயாராகி விட்டார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி, சிறுபான்மையினருக்கு எதிரான பாஜவிற்கு துணை போகிறார்.

சாமரம் வீசுகிறார். இட ஒதுக்கீடு, சமூக நீதியை அழிக்கும் பாஜவிற்கு ஜால்ரா பேடுகிறார். டபுள் இன்ஜின், டப்பா இன்ஜின் அமித்ஷா இந்த தமிழகத்துக்கு செய்தது என்ன? பாஜகவின் ஆட்சியில் தமிழகத்திற்கு கல்வி நிதி கிடையாது, ஜிஎஸ்டி ஒதுக்கீடு கிடையாது. நீட் விலக்கு இல்லை. புதிய ரயில்வே திட்டங்கள் கிடையாது, மெட்ரோ திட்டங்கள் கிடையாது, மதுரை எய்ம்ஸ் என்ற ஒற்றை திட்டம், இன்று அதன் நிலைமை என்ன? டெல்லியின் இருந்து பொடி நடையா நடந்து வந்தால் கூட இன்று கட்டி முடித்திருக்கலாம்.

இப்படி பாஜ ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டங்களும் இல்லை. இதுதான் மோடியின் மாடல் ஜெயலலிதா சட்டமன்றத்திற்கு வர முடியாமல் போன காலத்தில், அதிமுக தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. அதை நாங்கள் அன்று ஆதரித்தோம் என்பதை எடப்படி பழனிசாமி மறக்க வேண்டாம்.

உங்களை நம்பி பதவி கொடுத்த சசிகலாவை காலை வாரி விட்டவர் தான் நீங்கள், உங்களால் எந்தக் காலத்திலும் ஆட்சியை பிடிக்க முடியாது. தமிழ்நாட்டை காக்க திமுக தான் ஆட்சிக்கு வரும் என தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள். அந்த வெற்றி இந்தியாவே திரும்பி பார்க்கும் மாபெரும் வெற்றி. சிறப்பான ஆட்சி தொடர நெல்லை மாவட்டத்தின் 5 வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

* திமுக தேர்தல் அறிக்கையை சின்ன குழந்தையும் சூப்பர் ஸ்டார்ன்னு சொல்லும்
‘களத்தில் நிற்பது யாரு, சூப்பர் ஸ்டாரு, திமுகவின் தேர்தல் அறிக்கை தான் எப்ேபாதும் சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும். அதே போல இந்தத் தேர்தலில் சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா, திமுக தேர்தல் அறிக்கை தான் என சின்னக் குழந்தையும் சொல்லும். தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. அதில் சிக்ஸர் அடிப்பது போல நமது தேர்தல் அறிக்கையின் மூலம் சிக்ஸர் அடித்துள்ளோம்.’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

* பறக்கும்படை சோதனை நடத்தியபோது மக்களுடன் முதல்வர் கலந்துரையாடல்: அன்போடு அழைத்து பேசியதால் நெகிழ்ச்சி
தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை பிரசாரம் வேன் மூலம் பாளையங்கோட்டையில் நடைபெறும் திமுக பிரசார பொதுக்கூட்டத்திற்கு சென்றார். தூத்துக்குடி-நெல்லை நான்கு வழிச்சாலையில் வாகைகுளம் அருகே நிலையான கண்காணிப்பு குழு சார்லஸ் பிரேம்குமார் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுசிலா மற்றும் அதிகாரிகள், முதல்வரின் வாகனத்தை நிறுத்தினர்.

உடனே முதல்வர் மு.க.ஸ்டாலின் வாகனத்தில் இருந்து கீழே இறங்கினார். பறக்கும் படையினர் வாகனத்தில் சோதனை நடத்தியபோது, அருகில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மக்களை அன்போடு அருகில் வாங்கள் என்று அழைத்தார். முதலில் தயங்கிய அவர்கள், மீண்டும் முதல்வர் அழைத்ததும் அருகில் வந்து பேசினார். இதனால் நெகிழ்ச்சியடைந்த மக்கள், இன்ப மகிழ்ச்சியில் முதல்வருடன் கலந்துரையாடினர்.

பின்னர், அங்கு நின்ற மாணவியிடம் என்ன படிக்கிறாய், அடுத்து என்ன படிக்கப்போகிறாய்? என்று விசாரித்து நல்ல படிக்க வேண்டும் என முதல்வர் அறிவுரை வழங்கினார். பின்னர் சோதனை முடிந்த பிறகு அங்கிருந்து வேனில் ஏறி புறப்பட்டு சென்றார். முதல்வர் தங்களுடன் உரையாடியதால் பொதுமக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

* பெயரைச் சொல்லக்கூட எடப்பாடிக்கு தகுதி கிடையாது கலைஞருடைய இதயச்சிறையில்தான் நாங்கள் அனைவரும் குடியிருந்தோம்: முதல்வர் உருக்கம்
நெல்லை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘எடப்பாடி பழனிசாமி, நேற்று ஒரு பொதுக்கூட்டத்தில் என்ன பேசியிருக்கிறார் தெரியுமா? எனக்கு உயிர் கொடுத்து ஆளாக்கியவர் தலைவர் கலைஞர். கலைஞரை நான் வீட்டுச் சிறையில் வைத்திருந்தேன் என்று நாக்கில் நரம்பில்லாமல் பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தோல்வி பயத்தில் எல்லை மீறிப் பேசத் தொடங்கி இருக்கிறார்.

முதல்வராக என்னுடைய செயல்பாடுகளை விமர்சிக்க எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடிக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. தேர்தலில் அதை மக்கள் எடை போட்டுப் பார்ப்பார்கள். உங்களுக்குத் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகிறார்கள். ஆனால், தலைவர் கலைஞருடன் ஒரு மகனாக, என்னுடைய உறவைப் பற்றி, ஒரு சொல் பேசக் கூட உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. எந்தத் தகுதியும் கிடையாது.

தலைவர் கலைஞரைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? தலைவர் கலைஞர் ஒரு சிங்கம். வாழ்ந்த காலம் வரை, கோடிக்கணக்கான தொண்டர்களை என் உயிரினும் மேலான ‘உடன்பிறப்புகளே’ என்ற ஒற்றை மந்திரத்தில் கட்டிப் போட்டிருந்தவர். முதுமையால் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் ஓய்வெடுத்தார். நினைவாற்றலை இழந்தபோதுகூட, மருத்துவர்கள் உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டால், “அண்ணா… அண்ணா…” என்று சொன்ன அண்ணாவின் அன்புத்தம்பி அவர்.

முடியாத நிலையில்கூட, அறிவாலயம் செல்ல வேண்டும், முரசொலிக்கு செல்ல வேண்டும் என்று துடித்தவர். அவரை யாரும் சிறை வைக்க முடியாது. அவருடைய இதயச்சிறையில்தான் நான் உட்பட உடன்பிறப்புகள் அத்தனை பேரும் குடியிருந்தோம். எடப்பாடி பழனிசாமிக்கு கலைஞர் பெயரைச்சொல்லக்கூட தகுதியும் கிடையாது, எந்தவித யோக்கியதையும் கிடையாது.

5 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக இருந்து, தமிழ்நாட்டை நீண்ட காலம் ஆண்ட ஒரே முதல்வர், தலைவர் கலைஞர். அவருடைய கடைசி ஆசை என்ன? அவருடைய தலைவர் அண்ணாவிற்கு அருகே அடக்கம் செய்ய வேண்டும். அப்பாவுக்காக அல்ல, தலைவருக்காக. நானே உங்கள் வீட்டுப் படியேறி வந்து, கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டேன் என்னுடைய தந்தைக்காக அல்ல, தமிழினத்தின் தலைவர் அவர். கடற்கரையில் இடம் கொடுங்கள் என்று அந்தச் சோக சூழ்நிலையில்கூட உங்கள் முன்னால் வந்து நின்றேன், கொடுத்தீர்களா? இரக்கம் இல்லாமல் மறுத்தவர்தானே நீங்கள்.

அப்படிப்பட்ட உங்களுக்கு, எங்கள் தலைவரைப் பற்றி பேச எந்த யோக்கியதையும் கிடையாது. உங்கள் யோக்கியதை என்ன தெரியுமா? உங்களை நம்பிப் பதவி கொடுத்த சசிகலாவின் காலையே வாரிவிட்டவர். நம்பிய டிடிவி தினகரனையும், ஓபிஎஸ்சையும் முகுகில் குத்தியவர். உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சட்டமன்ற அவைக்கு வராமல் இருக்க ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதை ஆதரித்த இயக்கம் திமுக. இதுதான் உங்களுக்கும் – எங்களுக்கும் இருக்கும் வித்தியாசம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags : Palaniswami ,BJP ,Chief Minister ,M.K. Stalin ,Nellai ,Nellai Palai ,Saravana Stores ,Southern Bypass Road… ,
× RELATED டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில்...