சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் காணொலி காட்சி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார். வெற்றி ஒன்றே இலக்காக கொண்டு பணியாற்ற அவர் அறிவுறுத்தினார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதே போல துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் தொகுதி வாரியாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளுக்கு உட்டப்பட்ட பகுதிகளை முற்றுகையிட்டு அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அரசின் கடந்த 5 ஆண்டு கால சாதனைகளை விளக்கி தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முதற்கட்ட பிரசாரத்தை கடந்த 31ம் தேதி திருவாரூரில் தொடங்கி, கோவையில் நேற்று முன்தினம் நிறைவு செய்தார். இதை தொடர்ந்து அவர், சென்னை திரும்பினார்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு நேற்று வந்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள திமுக தேர்தல் கட்டுப்பாட்டு மையமான வார் ரூமில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து அவர், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்துக்கு சென்றார். அங்கிருந்து அவர், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பகுதி, நகரம், ஒன்றியம், வட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
இதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், மு.பெ.சாமிநாதன், தி.மு.க. இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தல் பணிகள் எப்படி உள்ளது என்று கேட்டறிந்தார். திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும் வகையில் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்று அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை ஊக்கப்படுத்தினார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக முழு அளவில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். வெற்றி ஒன்றையை குறிக்கோளாக கொண்டு பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், ‘தமிழ்நாடு முழுவதும் களப்பணியாற்றி மக்களின் நம்பிக்கையை வாக்குகளாக உறுதிசெய்து வரும், தி.மு.க. செயல்வீரர்களுடன் உரையாடி, ஊக்கப்படுத்தினேன். வெற்றி ஒன்றே இலக்கு. ஓய்வின்றி உழைக்கும் தி.மு.க.வின் செயல்வீரர்களுக்கு பாராட்டுக்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
