ஜெயங்கொண்டம் ஏப். 3: ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளர் யாசகம் வாங்கி, டெபாசிட் பணம் திரட்டி வந்து உதவி தேர்தல் நடக்கும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். செந்துறை அருகில் உள்ள அசாவீரன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் இராவணன் என்கிற இலங்கை வேந்தன்(59). பட்டய படிப்பு முடித்துள்ளார். தற்போது விவசாயம் செய்து வரும் இவர் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட உள்ளார். இவருக்கு பேனா முனை சின்னம் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக இவர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது டெபாசிட் கட்டுவதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று கூறி தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ளவர்களிடம் யாசகம் கேட்டார். பின்னர் அதன் வழியாக திரண்ட பணத்தை கொண்டு வேட்பாளருக்காக செலுத்த வேண்டிய வேட்பாளர் கட்டணத்தை செலுத்தினார். பின்னர் வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்தபோது கையில் சாட்டையுடன் பொதுமக்களிடம் உங்களிடம் சொல்லிய கோரிக்கைகளை சட்டமன்றத்தில் கூறவில்லை என்றால் இந்த சாட்டையால் எங்களை அடிக்கலாம் என சாட்டையை காட்டினார். இதனால் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் பரபரப்பு நிலவியது.
