×

வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால் தேர்தல் மையம் திறக்கலாம்

விருதுநகர், ஏப்.10: வேட்பாளரின் தேர்தல் மையம் வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டருக்கு அப்பால் அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கான சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் பொருட்களை அனுப்பி தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் நேரத்தில் கட்சியினர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

இதன்படி அரசியல் கட்சியினர் தங்களது அதிகாரப்பூர்வ பணியாளர்களுக்கு அடையாள அட்டைகளையும், பேட்ஜ்களையும் அளிக்க வேண்டும். அவர்கள் அளிக்கும் அடையாள சீட்டு வெள்ளை கலரில், சின்னம், வாக்காளர் பெயர் அல்லது கட்சியின் பெயர் ஏதும் இல்லாமல் இருக்க வேண்டும். மதுபானங்கள் எதுவும் வழங்க கூடாது. பதட்டம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் வாக்குச்சாவடி முகாமில் அதிக கூட்டம் கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வேட்பாளரின் முகாம் சாதாரணமாக இருக்க வேண்டும்.

போஸ்டர்கள், கொடிகள், சின்னங்கள் அல்லது இதர பிரசார சாதனங்களை பயன்படுத்தக் கூடாது. முகாமில் கூடும் கூட்டத்தினருக்கு தின்பண்டங்கள் எதையும் வழங்கக் கூடாது. வாக்குப்பதிவு நாளன்று அனுமதி பெற்ற வாகனங்களை மட்டும் பயன்படுத்துவதுடன் பெறப்பட்ட அனுமதி ஆணை வாகனத்தில் ஒட்டி வைக்க வேண்டும்.

வேட்பாளரின் தேர்தல் மையம் வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டருக்கு அப்பால் அமைக்க வேண்டும். இதில் இரண்டு நபர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும். குற்ற பின்னணி உடைய எவரையும் அரசியல் கட்சியினரோ வேட்பாளரோ தேர்தல் பணிக்கு நியமிக்க கூடாது. இதுபோன்ற விதிமுறைகளால் அரசியல் கட்சிகள் கலக்கமடைந்துள்ளன.

 

Tags : Virudhunagar ,Election Commission ,Assembly ,Tamil Nadu ,
× RELATED சட்டமன்ற தொகுதிகளில் 24 குழுக்கள் தீவிர கண்காணிப்பு