பழநி, ஏப்.10: பழநி டவுன், கிருஷ்ணமூர்த்தி 2வது வீதியைச் சேர்ந்தவர் தாடகையம்மாள் (70). இவரது குடிசை வீட்டில் திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென பற்றி கொளுந்து விட்டு எரிய துவங்கியது. அருகில் வசிப்பவர்கள், இதுகுறித்து பழநி தீயணைப்புப்படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து, சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நெரிசலான குடியிருப்பு பகுதிக்குள் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்புத்துறையினர் விரைந்து செயல்பட்டு அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. தீவிபத்தில் வீட்டில் இருந்து கட்டில், பீரோ, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின.
