தண்ணீர் திறக்கக்கோரி வட்டமலைகரை ஓடை அணையில் 26ல் தேசிய கொடி ஏற்றி விழிப்புணர்வு அணை பாதுகாப்பு குழுவினர் முடிவு

வெள்ளக்கோவில், ஜன. 18:  வெள்ளக்கோவில் அருகே உள்ள வட்டமலைகரை ஓடை அணைக்கு தண்ணீர் திறக்கக்கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 26ம் தேதி தேசிய கொடி ஏற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அணை பாதுகாப்பு குழுவினர் முடிவு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே உள்ள உத்தமபாளையத்தில் வட்டமலை ஓடையின் குறுக்கே 600 ஏக்கர் பரப்பளவில் 6050 ஏக்கர் பாசனம் பெறும் வகையில் 30 அடி உயரத்துக்கு 1980ம் ஆண்டு தடுப்பணை கட்டப்பட்டது. கடந்த 1985ம் ஆண்டு முதல் அணைக்கு தண்ணீர் வரத்து இன்றியும், பி.ஏ.பி பாசன தொகுப்பில் இருந்து உபரி நீர் திறக்க அரசாணை இருந்தும் தண்ணீர் திறக்கப்படாததால் கடந்த 30 ஆண்டுகளாக அணை வறண்டு காட்சிப்பொருளாக உள்ளது.

இந்நிலையில் வெள்ளக்கோவிலில் வட்டமலைகரை அணை பாதுகப்பு குழு துணை தலைவர் ஜவஹர்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்  நேற்று நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: வட்டமலைகரை அணைக்கு பல வருடங்களாக நீர் இல்லை. பிஏபி பாசன தொகுப்பிலிருந்து தண்ணீர் திறக்க கோரி வரும் ஜனவரி 26ம் தேதி அன்று குடியரசு தினத்தையொட்டி அணைப்பகுதியில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்து அணையை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.

இந்த விழிப்புணர்வில்  திருப்பூர் மாவட்ட அளவிலான 30க்கும் மேற்பட்ட சமூக நல அமைப்புகள் ஒன்றிணைந்து மேற்கொள்வார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் 10கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர். பின்பு வட்டமலைகரை ஓடை  அணையில் தேசியக்கொடி ஏற்ற அனுமதி வேண்டி வெள்ளகோவில் போலீஸ் ஸ்டேஷனில் மனு அளித்தனர்.

Related Stories: