புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வையாபுரி மணிகண்டனை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘கடந்த தேர்தலிலும், தேர்தல் அறிக்கையிலும் நாம் கூறி வாக்கு சேகரித்த அத்தனையையும் நம்முடைய அரசு நிறைவேற்றி இருக்கிறோம். சட்டசபையில், பட்ஜெட்டில் கூறிய வாக்குறுதிகளையும், புதிய திட்டங்களையும் கொண்டு வந்து செயல்படுத்தி இருக்கிறோம்.
ரூ.13,500 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். 5 ஆண்டுகளில் ரூ.58 ஆயிரம் கோடி திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். பொதுப்பணித்துறை மூலம் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி உள்ளோம். ஒவ்வொரு எம்எல்ஏக்கள் தொகுதியிலும் பணிகளை மேற்கொள்ள ரூ.300 கோடிக்கு மேல் ஒவ்வொரு தொகுதிக்கும் கொடுத்துள்ளோம். குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகை ரூ.2,500 கொடுத்து விட்டோம். பிறந்த பெண் குழந்தைகள் பெயரில் ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி வழங்கப்படுகிறது.
அது 18 வயதில் ரூ. 3 லட்சமாக கிடைக்கும். மீண்டும் நம்முடைய அரசு வந்தபிறகு ரூ.50 ஆயிரம் என்பதை ரூ.1 லட்சமாக உயர்த்தி கொடுப்போம். மீண்டும் நாம் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். ஆட்சி அமைந்த பிறகு மேலும் பல திட்டங்களை கொண்டு வருவோம். நாம் ஆட்சிக்கு வந்த பிறகு சுமார் 5 ஆயிரம் பணியிடங்களை நிரப்பி உள்ளோம். இன்னும் சில பணியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. அனைத்து திட்டங்களையும் இந்த அரசு செய்துள்ளது. மாநில வளர்ச்சி, மக்கள் நலனுக்காக மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வருவதற்கு வாக்களிக்க வேண்டும்,’’ என்றார்.
