×

தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்படுவது இல்லை சமூக ஊடகங்களில் இருந்து பாதுகாப்பு ஏஜென்சிகள் தகவல்கள் சேகரிக்கின்றன: உள்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல்

புதுடெல்லி: பாதுகாப்பு ஏஜென்சிகள், தகவல் சேகரிப்பிற்காக சமூக ஊடகங்கள் போன்ற பொது மூலங்களில் இருந்து திறந்த மூல உளவு தகவல்களை பயன்படுத்துகின்றன என்றும் தனிப்பட்ட தரவுகள் எதுவும் சேகரிக்கப்படுவது இல்லை என நாடாளுமன்ற குழுவிடம் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாகத் தகவல்களைச் சேகரிக்கும்போது, ​​தனியுரிமைப் பிரச்னையை எவ்வாறு கையாண்டது என்பதை அறிய உள்துறை அமைச்சகத்திடம் நிஷிகாந்த் துபே(பாஜ) எம்பி தலைமையிலான தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிலை குழு கோரியிருந்தது.

இந்த நிலையில் உள்துறை அமைச்சகம் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. மக்களவையில் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இணையதளம், சமூக ஊடகத் தளங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள்,புலனாய்வுத் தகவல்களைச் சேகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.சமூக ஊடகங்களிலிருந்து தனிப்பட்ட அல்லது அந்தரங்கத் தகவலும் சேகரிக்கப்படுவதில்லை. எனவே, தனியுரிமை மீறப்படுவதில்லை.

ஸ்கிராப்பிங் என்பது பொதுவாக பொது வலைப்பக்கங்கள் அல்லது சமூக ஊடகப் பதிவுகளைத் தானாகவே உலாவுவதற்கும், குறிப்பிட்ட தகவல்களை பிரித்தெடுப்பதற்கும், சட்ட அமலாக்கம் அல்லது புலனாய்வு நோக்கங்களுக்காக தகவல்களைச் சேமிப்பதற்கும் புலனாய்வு நோக்கங்களுக்காக தகவல்களைச் சேமிப்பதையும் குறிக்கிறது. பொது டிவிட்கள், பேஸ்புக் பதிவுகள், யூடியூப் வீடியோக்கள், டீப்பேக்குகள் அல்லது உருமாற்றப்பட்ட ஊடகங்கள், போலிச் செய்திகள் அல்லது தவறான தகவல்கள், வகுப்புவாத வெறுப்பைப் பரப்பும், வைரல் உள்ளடக்கம் உள்ளிட்ட சமூக ஊடகப் பதிவுகள் போன்ற தரவுகளை,பாதுகாப்பு அமைப்புகள் திறந்த மூல உளவுத் தொழில்நுட்ப நுட்பத்தைப் பயன்படுத்தி சேகரிக்கின்றன.

யூடியூப் சேனல்கள் மற்றும் டெலிகிராம் குழுக்களிலிருந்து, தீவிரவாத சித்தாந்தங்களை ஊக்குவிக்கும் தீவிரவாத உள்ளடக்கம் மற்றும் பதிவுகள், அல்லது பிரச்சார வீடியோக்கள் அல்லது வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சிக் காணொளிகளைப் பகிரும் பதிவுகளுக்காக, ஹேஷ்டேக்குகள் மற்றும் டிரெண்டுகளைச் சேகரிக்க இந்த ஸ்கிராப்பிங் பயன்படுத்தப்படலாம். இணைய சூதாட்டம், போலி வேலை வாய்ப்பு மோசடிகள் மற்றும் போலி முதலீட்டு மோசடிகள் போன்றவற்றைக் கண்காணிக்க, மோசடி இணையதளங்கள் அல்லது இணைப்புகளைக் கண்காணிக்க இந்த நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Home Ministry ,New Delhi ,
× RELATED அசாமில் காங்கிரஸ் வேட்பாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்