×

புகை எச்சரிக்கை: லக்னோவில் அவசரமாகத் தரையிறங்கிய டெல்லி விமானம்!

டெல்லி: மேற்கு வங்க மாநிலம் பாக்டோக்ராவிலிருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் விமானம், நேற்று மாலை லக்னோவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

142 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 148 பேருடன் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் புகை வருவதற்கான எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பயணிகளின் பாதுகாப்பை கருதி விமானிகள் உடனடியாக விமானத்தை லக்னோவிற்குத் திருப்பினர்.

லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இது குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த அவசர தரையிறக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். விமான நிலையத்தை வந்தடைந்த பயணிகள் அனைவரும் மாற்று விமானங்கள் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போது அந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தற்காலிகமாகப் பயன்படுத்த முடியாத நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நிபுணர்கள் குழு விமானத்தைத் தீவிரமாகப் பரிசோதித்து வரும் நிலையில், அனைத்து பாதுகாப்பு சோதனைகளும் முடிந்து தகுதிச் சான்றிதழ் பெற்ற பின்னரே அந்த விமானம் மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : DELHI ,Airbus ,Air India Express ,West Bengal ,Bakhtakra ,Lucknow ,
× RELATED பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் 2ம்...