×

பீகார் கோயிலில் நெரிசலில் சிக்கி 8 பெண்கள் பலி: 8 பேர் படுகாயம்

நளந்தா: பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம் மாக்ரா பகுதியில் புகழ்பெற்ற சீத்லா மாதா கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று மிகப்பிரம்மாண்டமான வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாட்டுக்காக கோயிலில் குவிந்தனர். அப்போது கூட்டத்தை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் திடீரென உடைந்தது. இதனால் பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டு ஓடியபோது பயங்கர நெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பக்தர்கள் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு பீகார் ஷெரீப்பில் உள்ள சதர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்துக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக ரூ.6 லட்சம் நிதியுதவியை வழங்கவும் உத்தரவிட்டார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சைகான ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தினார். பிரதமர் மோடி இரங்கல்: பீகாரில் கூட்ட நெரிசலில் பெண் பக்தர்கள் பலியான சம்பவத்துக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Tags : Bihar ,Nalanda ,Seetla Mata ,Magra ,Nalanda district ,Panguni ,
× RELATED அசாமில் காங்கிரஸ் வேட்பாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்