×

ஸ்மார்ட் சிட்டி என்பது அரைகுறைத் திட்டம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்

புதுடெல்லி: ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி இயக்கமானது அரைகுறைத் திட்டம் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது வாட்ஸ் ஆப் சேனலில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘பிரதமர் மோடி அரசின் ஸ்மார்ட் திட்டமானது உண்மையான செயல்படும் முறைக்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. அதாவது பிரம்மாண்டமான அறிவிப்புகள், அதைவிட பிரம்மாண்டமான விளம்பரங்கள், ஆனால் பூஜ்ய அளவிலான பொறுப்புடைமை ஆகும்.

ஒரு நகரம் தனது குடிமக்களுக்கு அடிப்படை கண்ணியத்தை அதாவது தூய நீர், தூய காற்று மற்றும் பாதுகாப்பை வழங்கத் தவறினால் அந்த நகரம் உண்மையாகவே ஸ்மார்ட் நகரமாக இருக்க முடியாது. மோடி அரசின் ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் திட்டத்தை நீங்கள் நிச்சயமாக நினைவில் வைத்திருப்பீர்கள். பிரதமரே சற்றும் சளைக்காமல் மிகைப்படுத்தப்பட்ட புகழாரங்களை சூட்டிப் பாராட்டிய ஒரு திட்டம் அது. தற்போது இந்த திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில் இதன் உண்மையான விளைவுகள் குறித்து நாடாளுமன்றத்தில் அரசிடம் நான் விளக்கம் கோரினேன்.

அப்போது வெளிப்பட்ட உண்மையானது ஒரு மோசடிக்கு சற்றும் குறைவானதல்ல என்று தான் கூற வேண்டும். உண்மையில் இந்த திட்டத்தின் நோக்கம் ஒருபோதும் நகரம் முழுவதையும் மேம்படுத்துவதாக இருந்ததே இல்லை. முழுமையான மாற்றத்திற்கான ஒரு கதையாடலாக பொதிந்து அரைகுறையாக தயாரிக்கப்பட்ட ஒரு திட்டமே தேசத்தின் மீது திணிக்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி என்பது எதைக்குறிக்கிறது. வெற்றியானது எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது? எத்தனை நகரங்கள் உண்மையாகவே உருமாற்றம் பெற்றன? மக்களின் வாழ்க்கையில் எத்தகைய உறுதியான மாற்றங்கள் நிகழ்ந்தன?. இந்த கேள்விகளுக்கு எந்த தெளிவான பதிலும் கிடைக்கவில்லை” என்றார்.

Tags : Rahul ,Modi ,New Delhi ,Lok Sabha ,Rahul Gandhi ,Union government ,WhatsApp ,Leader of the ,Modi government ,
× RELATED அசாமில் காங்கிரஸ் வேட்பாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்