கேரளாவில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தான் பாஜ தனது கணக்கை தொடங்கியது. அப்போது திருவனந்தபுரம் நேமம் தொகுதியில் பாஜவின் மூத்த தலைவரான ஓ. ராஜகோபால் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். ஆனால் 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜவுக்கு கையில் இருந்த ஒரு தொகுதியும் பறிபோனது. இந்நிலையில் இந்த தேர்தலில் பெருவாரியான தொகுதிகளைக் கைப்பற்றி கேரளாவில் ஆட்சி அமைப்போம் என்று பாஜ தலைவர்கள் கூறி வருகின்றனர்.
சமீபத்தில் கேரளாவில் பிரசாரத்திற்கு வந்த பிரதமர் மோடி, கேரளாவில் பாஜ ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதி என்றும், ஆட்சிக்கு வந்தால் முந்தைய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் அரசுகளின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம் என்று கூறினார். இந்த தேர்தலில் கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் பாஜ 90ல் போட்டியிடுகிறது.
பாஜ மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர், முன்னாள் தலைவர்கள், ஒன்றிய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் உள்பட அனைத்து மூத்த தலைவர்களும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் பாஜவின் தேர்தல் அறிக்கை நேற்று திருவனந்தபுரத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்சியின் மாநில தலைவர் நிதின் நபின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
* தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
* கேரளாவில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படும்.
* திருவனந்தபுரத்திலும், கோழிக்கோட்டிலும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
* திருவனந்தபுரம் முதல் கண்ணூர் வரை அதிவேக ரயில் பாதை அமைக்கப்படும்.
* ஏழைக் குடும்பங்களுக்கு வருடத்தில் 2 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
* ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் இலவசமாக வழங்கப்படும்.
* நல ஓய்வூதியம் ரூ. 3 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* கேரளாவில் உள்ள அனைத்து தேவசம் வாரியங்களும் மறுசீரமைக்கப்படும்.
* சபரிமலை தங்கம் திருட்டு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பாஜவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
