சென்னை: மனைவி, மகன், மகள் உள்ளிட்ட அனைவரும் கடன் வாங்கியுள்ளதாக நடிகர் விஜய் கூறியுள்ள நிலையில் மற்றவர்களுக்கு அவர் கடன் கொடுத்தது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். இதற்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுவை விஜய் நேற்றுமுன்தினம் தாக்கல் செய்தார். இந்த வேட்பு மனுவோடு ஒரு உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்தார். அதில் அவரது முழுவிபரமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் தனது பெயர் ஜோசப் விஜய் என்றும், வயது 52 என்றும் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் உள்ள 10 வங்கிகளில் ரூ.347 கோடி இருப்பு இருப்பதாக கூறியுள்ளார். மேலும் 14 பேர் கடன் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ரூ.3.02 கோடியும், தாய் சோபா சந்திரசேகர் ரூ.8.07கோடியும், மனைவி சங்கீதா ரூ.12.60 கோடியும், மகன் ஜேசன் சஞ்சய் ரூ.8.78 லட்சமும், மகள் திவ்யா சாசா ரூ.4.6 லட்சமும் கடன் பெற்றுள்ளனர்.
அதோடு தவெகவின் பொதுச் செயலாளரும், நடிகர் விஜயின் ரசிகர் மன்ற தலைவருமான புஸ்ஸி என்.ஆனந்த் ரூ.3 கோடி வாங்கியுள்ளார். அவர் எப்போது கடன் வாங்கினார். அதற்கு வட்டி கட்டியுள்ளாரா? வட்டி இல்லாத கடனா? என்பது குறித்த விவரங்கள் அதில் இல்லை. நீண்ட நாட்களாக அவருடன் இருப்பவர் இன்னும் கடனாளியாக இருக்கிறாரா என்றும், ஏன் அவ்வளவு பணம் வாங்கினார் என்றும் தெரியவில்லை. அதேபோல சுனில்ராஜ் என்பவர் ரூ.1.5 கோடி வாங்கியுள்ளார். அவர் குறித்த விபரமும் தெரியவில்லை.
மேலும் வி.ரவிச்சந்திரன் என்பவர் ரூ.5 கோடி கடன் வாங்கியுள்ளார். அவர் சினிமா தயாரிப்பாளர்தான் வி.ரவிச்சந்திரன் என்று கூறப்பட்டது. அவர், ஏற்கனவே ‘வேலாயுதம்’ என்ற படத்தை தயாரித்தார். அதில் பெரிய அளவில் நஷ்டமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் கடன் வாங்கினாரா என்று அவரிடம் கேட்டபோது, விஜயிடம் தனக்கு எந்த கொடுக்கல், வாங்கலும் கடந்த சில ஆண்டுகளாக இல்லை என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து ஏ.எல்.பி.ஆண்டானியஸ் பிரிட்டோ என்பவர் ரூ.20 கோடி வாங்கியுள்ளார். இவர், புதுவையில் அமலோற்பவம் உயர்நிலைப் பள்ளியின் முதல்வராக உள்ளார். இவரது அப்பா லூர்துசாமி. இவர் பள்ளியின் தாளாளர் மற்றும் முதுநிலை முதல்வராக உள்ளார். இவர்கள் புதுவையில் மாநிலக்கல்வி பயிலும் பள்ளி வானரப்பேட்டையிலும், சிபிஎஸ்இ பள்ளி கொம்பாக்கம் என்ற இடத்திலும் நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும், புஸ்ஸியின் நெருங்கிய நண்பர்கள். புஸ்ஸி தொகுதிக்குள்தான் பள்ளி வருகிறது. இதனால் இருவரும் நண்பர்களாக இருந்தனர்.
புஸ்ஸி மூலம் விஜயின் அறிமுகம் அவர்களுக்கு கிடைத்துள்ளது. அந்த அறிமுகத்தை வைத்து விஜய்யிடம் ரூ.20 கோடி கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.அதேபோல, நடிகர் விஜய், கோகிலாம்பாள் கல்வி அறக்கட்டளைக்கு ரூ.20 கோடி கடனாக கொடுத்துள்ளார். இந்த அறக்கட்டளை அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ளது. அறக்கட்டளை சார்பில் சிபிஎஸ்இ பள்ளியும், கும்பகோணத்தில் நீட் மற்றும் ஜேஇஇ கோச்சிங் பயிற்சி மையமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கடன், கோகிலாம்பாள் சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் அன்பழகனிடம் இவரது உறவினர் ஐயப்பன் மூலம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ஐயப்பன், பாஜ முன்னாள் நிர்வாகி மற்றும் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக உள்ளார். இதனால் ஐயப்பன், விஜய்க்கு அறிமுகமாகி இருக்கலாம். அதன்மூலம் அன்பழகனுக்கு ஐயப்பன் மூலம் ரூ.20 கோடி வழங்கியிருக்கலாம். முக்கியமாக, விஜய்யின் பினாமியாக அன்பழகன் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனாலேயே ரூ.20கோடி அன்பழகனுக்கு விஜய் கொடுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை சம்பந்தப்பட்டோரிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. இதனால் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்க வாய்ப்பு உள்ளது. சினிமா வட்டாரத்தில் தான் விஜய்க்கு அதிகளவு பழக்கம் உள்ளது. ஆனால், அரியலூர் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு ரூ.20 கோடி கொடுத்துள்ளார் என்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பள்ளிக்கும், விஜய்க்கும் இடையே நேரிடையாக தொடர்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும், கடந்த 2024ம் ஆண்டு கோகிலாம்பாள் கல்வி அறக்கட்டளைக்கு விஜய் பணம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
2025ம் ஆண்டு அந்த பணத்தை கல்வி நிறுவனம் செலுத்தியதாக தெரிகிறது. வருமான கணக்கு காண்பிப்பதற்காக கடன் கொடுத்தது போல் கொடுத்து, பின்னர் வாங்கியது அம்பலமாகி உள்ளது. இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினால் அறக்கட்டளைக்கு விஜய் ஏன் பணம் கொடுத்தார் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்பது மக்கள், அரசியல் விமர்சகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது’’ என்றனர்.
* குடந்தையில் நீட் அகாடமி
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ளது கோகிலாம்பாள் நீட் அகாடமி. இந்த அகாடமி அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, குழவடையான் கிராமத்தில் இயங்கி வரும் கோகிலாம்பாள் பள்ளி குழுமத்தில் ஒன்றாகும். கும்பகோணத்தில் இந்த நீட் அகாடமி கடந்த 5வருடங்களாக இயங்கி வருகிறது. கும்பகோணத்தில் வேறு எங்கும் நீட் அகாடமி இல்லாத காரணத்தால் கும்பகோணம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் இங்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவர்களிடம் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்து பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
