- அன்புமணி
- எடப்பாடி
- ராமதாஸ்
- சசிகலா
- நடவடிக்கை
- பாலமகா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- Bhamaka
- தேசிய ஜனநாயக கூட்டணி
- ஐபுமாமுக
- வடமேற்கு பகுத
தமிழகத்தில் வட மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்த பாமக தற்போது பிளவுபட்ட கட்சியாக இத்தேர்தலில் களம் காண்கிறது. அன்புமணி தலைமையிலான பாமக, தேசிய ஜனநாயக கூட்டணியில் 18 தொகுதியிலும், ராமதாஸ் தலைமையிலான அணி, சசிகலாவின் அஇபுமமுகவுடன் இணைந்தும் தேர்தலில் போட்டியிடுகிறது. வடமேற்கு தொகுதிகளில் ராமதாஸ் தனது அணி எத்தனை தொகுதியில் போட்டியிடுகிறது என்பதை அறிவிக்காத நிலையில் நேற்று முன்தினம் முதல்கட்டமாக 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். அதில் சேலம் மேற்கில் அருள், வந்தவாசி முரளிசங்கர், கும்பகோணம் ம.க.ஸ்டாலின், விருத்தாசலம் சுரேஷ், மயிலாடுதுறை பாக்கம் சக்திவேல் ஆகியோர் போட்டியிடுவதாக தெரிவித்தார்.
இதில் அன்புமணி அணியில் சேலம் மேற்கில் கார்த்தி, விருத்தாசலத்தில் தமிழரசி ஆதிமூலம், மயிலாடுதுறையில் சித்தமல்லி பழனிசாமி ஆகியோரை எதிர்த்து ராமதாஸ் தனது அணி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளதால் தேர்தல் களத்தில் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2ம் கட்டமாக 10 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை ராமதாஸ் நேற்று மாலை அறிவித்தார். செஞ்சியில் பாமக(அ) வேட்பாளர் கணேஷ்குமாருக்கு எதிராக மாவட்ட செயலாளர் கனல்.பெருமாளை நிறுத்தி உள்ளார். தர்மபுரியில் அன்புமணி மனைவி சவுமியாவுக்கு எதிராக மாவட்ட செயலாளர் சரவணன் நிறுத்தப்பட்டுள்ளார். திருப்போரூரில் கே.பாலுவை எதிர்த்து மாநில துணை அமைப்பு செயலாளர் ஏகாம்பரமும், உத்திரமேரூரில் மகேஷ்குமாரை எதிர்த்து மாவட்ட செயலாளர் ஸ்ரீதரும், ஜெயங்கொண்டத்தில் வைத்தியை எதிர்த்து மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் தென்கிழக்கு மாவட்டங்களில் செல்வாக்குமிக்க சசிகலாவும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பிரபலங்களுக்கு எதிராக தனது கட்சியின் முதல்கட்ட வேட்பாளர்களாக 23 பேரை அறிவித்துள்ளார். அதில் திருத்தணியில் அரசு முன்னாள் தலைமை கொறடா நரசிம்மன், நாங்குநேரியில் முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ச.வெள்ளத்துரை, கள்ளக்குறிச்சி தனி தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆனந்தன், சங்கரன்கோயில் (தனி) தொகுதியில் முன்னாள் எம்பி வசந்தி முருகேசன் உள்ளிட்ட தொகுதிகளில் செல்வாக்குமிக்க முக்கிய பிரபலங்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்நிலையில் 2ம் கட்டமாக 38 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை சசிகலா நேற்றிரவு அறிவித்தார்.
துரோகிகளுக்கு பாடம் புகட்டவே இந்த கூட்டணி எனத் தொிவித்திருந்த ராமதாசும், சசிகலாவும் பாமகவுக்கும் (அன்புமணி அணி), அதிமுகவுக்கும் (எடப்பாடி) எதிராக மக்களிடம் பிரசித்தி பெற்ற வேட்பாளர்களை களமிறக்கி வருவதால் அந்த அணிகளின் வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். தங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை தேர்தல் பிரசாரத்தின்போது தோலுரித்துக் காட்டவும் இருவரும் முடிவெடுத்து இருப்பதால் தங்களுக்கு வரவேண்டிய வாக்கு வங்கி பாதிக்கப்படக்கூடும் என்று அன்புமணியும், எடப்பாடி பழனிசாமியும் அதிர்ச்சியில் உள்ளதாக தமிழக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
* உங்க மகனை மட்டும் சேப்டியாக காங்கிரசுக்கு அனுப்பிச்சுட்டீங்க… ஜி.கே.மணியை சரமாரியாக கேள்வி கேட்ட நிர்வாகிகள்
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் வேட்பாளர்களை ராமதாஸ் அறிவிப்பதற்கு முன்பு, கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது கவுரவ தலைவர் ஜி.கே.மணி, ‘‘கட்சிக்கு எல்லோரும் துரோகமிழைத்து அதல பாதாளத்துக்கு தள்ளிவிட்டனர். நாம்தான் உழைத்து கட்சியை முன்னேற்ற வேண்டும்’’ என மைக்கில் பேசியுள்ளார். அப்போது ஆவேசமாக குறுக்கிட்ட நிர்வாகிகளில் சிலர், ‘‘இந்த கட்சி அழிய காரணமே நீங்கள்தான். திராவிட கட்சிகளில், ஒன்றில் நாம் கூட்டணி சேர்ந்து குறைந்த தொகுதிகளையாவது பெற்று களமிறங்கி இருக்கலாம். ஆனால் எதுக்குமே வழியில்லாத நிலையை இன்று நீங்கள் ஆக்கி விட்டீர்கள். ஆனால் உங்க மகனை சேப்டியாக காங்கிரசுக்கு அனுப்பி உள்ளீர்கள். இந்த கட்சியும், அய்யாவும் என்ன ஆவது?’’ என தங்களது மனக்குமுறலை ராமதாஸ் முன்னிலையில் கொட்டித் தீர்த்துள்ளனர். இதற்கு எந்தவித பதில் ரியாக்ஷனும் அளிக்காமல் ஜி.கே.மணி அமைதி காக்க, அருகிலிருந்த ராமதாசிடம் அவரிடம் உள்ள (ஜி.கே.மணி) மைக்கை முதலில் நீங்க வாங்குங்க அய்யா… என நிர்வாகிகள் முறையிட்டதும் தற்போது கசிந்து வருகிறது.
* ஒரே தொகுதிக்கு இருவரும் வேட்பாளர்கள் அறிவிப்பு: சசிகலா திடீர் வாபஸ்
அஇபுதமமு பொதுச் செயலாளர் சசிகலா, இரு தினங்களுக்கு முன்பு 23 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இதில் மயிலாடுதுறை தொகுதியில் சுதாகர் என்பவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளார். இதுபோல் ராமதாஸ் நேற்று முன்தினம் அறிவித்த பட்டியலில் மயிலாடுதுறையில் பாக்கம் சக்திவேல் என்பவரை அறிவித்துள்ளார். ஒரே கூட்டணியில் 2 வேட்பாளர்களை அறிவித்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்றிரவு மயிலாடுதுறை வேட்பாளரை சசிகலா வாபஸ் பெற்றுள்ளார்.
