×

சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவம் திட்டம்

சொன்னாரு: 30 வயதைக் கடந்தவர்கள் பலருக்கும் சிறுநீரகக் கோளாறு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இதனை தடுக்க சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவத் திட்டத்தை செயல்படுத்த 2023-24 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

செஞ்சாரு: சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவம் திட்டம் தமிழ்நாட்டின் முக்கியமான தடுப்பு மருத்துவத் திட்டங்களில் ஒன்றாகும். இது சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை அளித்து, நோய் முன்னேற்றத்தைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் 2023 ஜூலை 10ம் தேதி தமிழக அளவில் முதன்முறையாக சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதைத் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

2023 ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மூலம் மக்களைத் தேடி சென்று செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், 30 வயதுக்கு மேற்பட்டவர்கள், நீரிழிவு நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் போன்ற உயர் அபாயக் குழுக்களிடம் சிறுநீரக பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிவதாகும். சிறுநீர் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை மூலம் சிறுநீரக செயல்பாட்டை மதிப்பிடுகின்றனர்.

புரதம் கசிதல் போன்ற ஆரம்ப அறிகுறிகளை உடனடியாகக் கண்டறிந்து, மருந்துகள், உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை ஆலோசனை ஆகியவற்றை வழங்குகின்றனர். தேவைப்பட்டால் உயர் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 8,213 அரசு துணை சுகாதார நிலையங்கள், 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் வழியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நகர்ப்புறங்களிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மக்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். 2025 மே மாத நிலவரப்படி, சுமார் 34,000 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

இது சிறுநீரக செயலிழப்பு முழுமையாக வருவதைத் தடுத்து, டயாலிசிஸ் அல்லது மாற்று அறுவை சிகிச்சை தேவையை கணிசமாகக் குறைக்க உதவுகிறது.சிறுநீரக பாதிப்பு தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சூழலில் இத்திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ள சுமார் 2 கோடி பேருக்கு இது பாதுகாப்பு அளிக்கிறது. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தொடர் கண்காணிப்பு, மருந்து வழங்கல், உணவு ஆலோசகர்கள் மூலமான வழிகாட்டுதல் ஆகியவை வழங்கப்படுகின்றன. இத்திட்டம் தமிழ்நாட்டின் பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்தி, மருத்துவச் செலவை குறைக்க உதவுகிறது.

Tags : Sonnaru ,Tamil Nadu government ,Sencharu ,
× RELATED ஜாடிக்கேத்த மூடி, மூடிக்கேத்த ஜாடி...