தேர்தல் அரசியல் களத்தில் வெற்றிக்கான வாய்ப்பை தேடிச் சென்று, அந்த பார்முலாவை பின்பற்றுவது அரசியல் கட்சிகளின் பாணி. ஆனால், அதற்கான ஈடுபாடு, அர்ப்பணிப்பு உணர்வு மிகவும் முக்கியம். அந்த வகையில் தமிழ்க்கடவுள் முருகனை வைத்து, தமிழகத்தில் அரசியல் காவடி தூக்க நினைத்தது பாஜ கட்சி. ஆனால், ஆறுதலாக 2வது படைவீடான திருச்செந்தூர் தொகுதி மட்டுமே அக்கட்சிக்கு கிடைத்ததால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
முதல் படையில் பதற்றத்தீ…
முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தை வைத்துதான் பாஜ தங்களது முருக அரசியலை தொடங்கியது. கார்த்திகை தீபத்தை மலை உச்சி மீதுள்ள தூணில்தான் ஏற்ற வேண்டுமென்றது. நீதிமன்ற வழக்கு, அவமதிப்பு வழக்கு என மாறி, மாறி போட்டது. ஆர்ப்பாட்டம், முற்றுகை என போராட்டங்களை முன்னெடுத்தது. இதை வைத்து திருப்பரங்குன்றம் தொகுதியையும் தங்களது விருப்ப பட்டியலில் கேட்டிருந்தது. இதனால் தேவையற்ற சட்டம், ஒழுங்கு பிரச்னை எழுந்ததால், அப்பகுதி மக்கள் பாஜ மற்றும் இந்து அமைப்புகளின் எண்ணத்திற்கு ஒத்துழைக்கவில்லை. மேலும், இத்தொகுதி சிட்டிங் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, இந்த தொகுதிதான் வேண்டுமென கடைசி வரை விடாப்பிடியாக இருந்ததால் வேறு வழியின்றி பாஜ வழி விட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
2ம் படை இனித்தது : விருப்ப பட்டியலில் கேட்டிருந்த 2ம் படை வீடான திருச்செந்தூர் தொகுதி மட்டுமே பிரச்னையின்றி பாஜ வசமே வந்தது. இது மட்டுமே பாஜ கட்சியினருக்கு ஒரே ஆறுதலாக அமைந்தது.
3ம் படையில் முட்டல் : மூன்றாம் படை வீடான பழநி சட்டமன்ற தொகுதியையும் தங்களது விருப்ப பட்டியலில் பாஜ கேட்டிருந்தது. இதையும் அதிமுக தரப்பு விட்டுத் தரவில்லை. இந்த முறையும் கடந்த 2021 தேர்தலில் தோற்ற ரவிமனோகரனை வேட்பாளராக நிறுத்தி விட்டது. இந்த தொகுதியை தங்களுக்கு கேட்டு பாஜ தற்போது வரை கட்சி ஆபீஸ் முற்றுகை உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆனால், அதிமுக வேட்பாளர் தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கி விட்டார். இவருக்கு பாஜ ஆதரவு தருமா என்பதும் சந்தேகமே.
அடுத்தடுத்த வீடுகளும் அவுட்…:
முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலை பாபநாசம் தொகுதியில் வருகிறது. இந்த தொகுதியும் அதிமுகவுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி வேட்பாளராக சண்முகபிரபு போட்டியிடுகிறார். 5ம் படை வீடான திருத்தணியும் அதிமுகவுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் ஹரி போட்டியிடுகிறார்.
ஆறாவது படையும் ம்ஹூம்…: முருகனின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோயில் அழகர் மலை மீதுள்ளது. இது மேலூர் தொகுதியின் கட்டுப்பாட்டில் வருகிறது. இங்கும் பாஜ முட்டி மோதி சீட் கேட்டு பார்த்தது. ஆனால், சிட்டிங் எம்எல்ஏ அதிமுக என்பதால், பாஜ கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை.
பழநியில் தமிழக அரசு நடத்திய அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடுக்கு பதிலாக மதுரையில் முருக பக்தர்கள் மாநாடை இந்து அமைப்புகள் சார்பில் பாஜ நடத்தியது. கூட்டம் சேர்ந்ததே ஒழிய, இது பாஜவுக்கு ஒருபோதும் ஓட்டு அரசியலாக மாறவில்லை. ஆன்மிகம் என்பது வேறு… அரசியல் என்பது வேறு என்ற குறிக்கோளுடன் தமிழக மக்கள் உள்ளதால், முருக அரசியலுக்கு பாஜ முழுக்கு போட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இதற்கு தேஜ கூட்டணியின் தமிழக தலைவராக கூறிக்கொள்ளும் ‘பழனி’சாமியும் ஒரு காரணம்; ஆறுபடை வீட்டில் ஐந்து படை வீட்டில் வேட்பாளர்களை நிறுத்தி விட்டாரே என பாஜ தொண்டர்கள் புலம்பி வருகின்றனர். சீட்டு விவகாரத்தில் தாமரை இலையும், தண்ணீரும்போலத்தான் அதிமுக – பாஜ கூட்டணி விளங்குகிறது என்பதில் துளியும் ஐயமில்லை.
