முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செ.கு.தமிழரசன் சந்திப்பு: திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவிப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று செ.கு.தமிழரசன் சந்தித்து பேசினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை, இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் சந்தித்துப் பேசினார். அப்போது இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அவர் ஆதரவு தெரிவித்தார். மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் செ.கு.தமிழரசன் அளித்த பேட்டியில், ‘‘தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் ஒரே கட்சி திமுக தான். திமுக கூட்டணியை ஆதரிப்பது அம்பேத்கர் இயக்கங்களின் தலையாய கடமை. அம்பேத்கரிஸ்டுகளை ஒருங்கிணைத்து திமுகவின் மகத்தான வெற்றிக்கு பாடுபடுவோம்’’ என்றார்.

இந்திய குடியரசு கட்சி அதிமுக தலைமையிலான கூட்டணியில் நீண்டகாலம் இடம் பெற்றிருந்தது. 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் கே.வி.குப்பம் தொகுதியில் செ.கு.தமிழரசன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011ல் அதிமுக கூட்டணி வெற்றி பெற்ற போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா செ.கு.தமிழரசனை தற்காலிக சபாநாயகராக்கினார். அதன்பிறகு 2016 சட்டசபை தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* விசிக வேட்பாளர்கள் முதல்வரிடம் வாழ்த்து
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன்படி காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அக்கட்சி தலைவர் திருமாவளவன், செய்யூர் தொகுதியில் சிந்தனைச் செல்வன், திருப்போரூர் தொகுதியில் பன்னீர் தாஸ், பெரியகுளம் தொகுதியில் ஆற்றல் அரசு, பண்ருட்டி தொகுதியில் அப்துல் ரகுமான், திண்டிவனம் தொகுதியில் வன்னி அரசு, அரக்கோணம் தொகுதியில் எழில் கரோலின், கள்ளக்குறிச்சி தொகுதியில் மாலதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் விசிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக விழா நேற்று அசோக் நகரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. அப்போது அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அனைவரையும் அக்கட்சி தலைவர் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் வேட்பாளர்களுக்கு மாலை போட்டு வரவேற்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் திருமாவளவன் உள்ளிட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Related Stories: