×

தரங்கம்பாடி அருகே நண்டலாறு சோதனைசாவடியில் பாதுகாப்பு பணியில் துணை ராணுவபடையினர்

 

தரங்கம்பாடி, மார்ச் 29: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள நண்டலாறு சோதனைசாவடியில் சட்டமன்ற தேர்தலையொட்டி வாகன சோதனை நடைபெற்று வருகின்றன. நேற்று முதல் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையம் ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் என்று கடந்த 15ம் தேதி அறிவித்தது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும், தேர்தல் தொடர்பான புகார்களை பெற அலுவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 9 பறக்கும் படைகளும், 9 நிலையான கண்காணிப்பு குழுவினரும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் பணம் வழங்குவதை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு செல்லும் வழியில் தரங்கம்பாடி அருகே நண்டலாறு சோதனைச்சாவடி உள்ளது. இது இரு மாநிலங்களின் எல்லை என்பதால் அங்கு தீவிரமான வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முதல் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுழற்சி முறையில் 24 மணி நேரமும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags : Nandalaru ,Tharangambadi ,Mayiladuthurai district ,Election Commission of India ,
× RELATED சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி...