×

ஆசிய கண்டத்திலேயே பிரம்மாண்டமானது திருவாரூரில் நாளை ஆழித்தேராட்டம்

*வடம் பிடிக்க காத்திருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள்

திருவாரூர் : திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்ட விழா நாளை நடைபெறுவதையொட்டி 5 தேர்களும் தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் இன்று இரவு தியாகராஜர் ஆழித்தேரில் எழுந்தருளும் வைபவம் நடைபெற உள்ளது.

திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயில் சைவசமயத்தின் தலைமை பீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது.

மேலும் கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி என நிலப்பரப்பினை கொண்ட இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வருகின்றனர். இக்கோயிலின் ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு திருவாரூர் ஆழித்தேரோட்டம் நாளை (29ந் தேதி) நடைபெறுகிறது. இதனையொட்டி தியாகராஜர் தனக்கே உரிய அஜபா நடனத்துடன் கோயிலின் சன்னதியிலிருந்து புறப்பட்டு விட்ட வாசல் வழியாக இன்று (28ம்தேதி) இரவு ஆழித்தேரில் எழுந்தருளும் வைபவம் நடைபெற உள்ளது. பின்னர் ஆழித்தேரில் தியாகராஜருக்கு இன்று இரவும், நாளை காலையும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

நாளை காலை 9.05 மணிக்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க, ஆழித்தேரோட்டம் கோலாகலமாக நடக்க உள்ளது. முன்னதாக காலை 5 மணியளவில் விநாயகர் மற்றும் சுப்ரமணியர் தேர்களும், ஆழித்தேருக்கு பின்னால் கமலாம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம் பிடித்து இழுக்கப்படும்.

இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் உள்துறைக்கட்டளை பரம்பரை அறங்காவளர் ராம்தியாகராஜன், உதவி ஆணையர் ராஜா இளம்பெருவழுதி, செயல் அலுவலர் கவியரசு மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.

தேரின் சிறப்பு

திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் ஆழித் தேர் மற்ற ஊர் தேர்களை போல் எண்பட்டை அறுகோணம், வட்ட வடிவமைப்பு போன்று இல்லாமல் பட்டை வடிவ அமைப்பினை கொண்டதாகும். மொத்தம் 20 பட்டைகளை கொண்ட இந்த தேர் நான்கு அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

கீழ்பகுதி 20 அடி உயரமும், 2வது பகுதி 4அடி உயரமும், 3வது பகுதி 3அடி உயரமும் கொண்டதாகவும். இறுதியாக 4வது பகுதியாக தேரின் மேடை பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தான் தேரோட்டத்தின் போது தியாகராஜசுவாமி அமர்ந்து வலம் வருவது வழக்கம். மேலும் சாதாரணமாக 30 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்ட இந்த தேரானது 4 ராட்சத இரும்பு சக்கரங்கள் உட்பட மொத்தம் 220 டன் எடை கொண்டதாகும்.

Tags : Asia ,Thiruvarur ,Azhi Theratta festival ,Thyagaraja Swamy Temple ,Thyagaraja ,Azhi Theratta ,
× RELATED சென்னை மதுரவாயலில் தேர்தல் பறக்கும்...