×

வரும் 30ம் தேதி தொடங்குகிறது வேட்பு மனுதாக்கல் முன்னேற்பாடு பணிகள்

*மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

விருத்தாசலம் : கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமான கோட்டாட்சியர் அலுவலகத்தில், ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி வரும் 30ம் தேதியில் இருந்து வேட்பு மனு தாக்கல் தொடங்கப்பட உள்ளது.

வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது வேட்பாளர்கள், வேட்பு மனுதாக்கல் செய்யும்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்ற தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதற்கிணங்க கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்தல், வேட்பு மனு தாக்கல் செய்வதை முறையாக ஒளிப்பதிவு செய்திடுதல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளரையும் சேர்த்து மொத்தம் 5 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். வேட்பு மனு தாக்கலின் போது தேர்தலுக்காக வேட்பாளர்கள் விண்ணப்பத்தை தாக்கல் செய்யும் சமயத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரது அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 3 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும்.

வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது கூட்டமாக வருவது தவிர்க்கப்பட வேண்டும். பிரசார வாகனங்களை வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்தில் பயன்படுத்தக்கூடாது போன்ற தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முறையாக பின்பற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலை நியாயமான மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் நடத்திட ஏதுவாக பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள் வாகன சோதனையின் போது பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கைப்பற்றப்படும் பணம் மற்றும் பொருட்களை உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் குறைதீர்க்கும் குழுவை அணுகி மீளப்பெற்று கொள்ளலாம், என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

இதில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், கோட்டாட்சியர் விஷ்ணுப்பிரியா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் பிரகாஷ், நகராட்சி ஆணையர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Virudhachalam ,District ,Virudhachalam Assembly Constituency ,Cuddalore District ,
× RELATED சென்னை மதுரவாயலில் தேர்தல் பறக்கும்...