*திமுக அரசுக்கு பாராட்டு
மரக்காணம் : விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ராயநல்லூர், நல்லம்பாக்கம், மண்டகப்பட்டு, ஆலத்தூர், கொள்ளுமேடு, காணிமேடு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இடையில் சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று பக்கிங்காம் கால்வாயில் சேருகிறது ஓங்கூர் ஆறு. இந்த ஆற்றில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
இப்படி வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் வெள்ள நீரானது ஆற்றின் கரை ஓரம் இருக்கும் கிராமங்களிலும் புகுந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக காணிமேடு, மண்டகப்பட்டு கிராம பகுதியில் மிகப்பெரிய சேதம் உண்டாகும்.
இந்த வெள்ளப்பெருக்கின்போது இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது கிராமங்களில் இருந்து வெளியிடங்களுக்கு செல்ல சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் அவலநிலை ஏற்படும். மேலும் மின்விநியோகமும் இந்த கிராமங்களுக்கு துண்டிக்கப்படும்.
இதுபோன்ற காரணங்களால் இப்பகுதி பொதுமக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவந்தனர். இந்த கிராமங்களில் பொதுமக்கள், விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் கூட வெள்ளப்பெருக்கில் அடித்து சென்றுவிடும்.
இதனால் மண்டகப்பட்டு, காணிமேடு கிராமங்களுக்கு இடையே உயர்மட்ட மேம்பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று 100 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், இவர்களின் கோரிக்கை பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமலே இருந்தது.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்த கிராமங்களுக்கு இடையே ஓங்கூர் ஆற்றில் மேம்பாலம் கட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.
இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் புதிய உயர்மட்ட மேம்பாலம் நவீன முறையில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடத்தும் நிலையில் உள்ளது. உயர்கோபுர மின்விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து இப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் எங்கள் கிராமங்கள் ஓங்கூர் ஆற்றங்கரை ஓரம் அமைந்துள்ளதால் ஆண்டுதோறும் பருவமழை காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவோம்.
பல நாட்கள் வீட்டை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கும் சென்றுவிடுவோம். நாங்கள் பல ஆண்டுகளாக வைத்த கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்பகுதியில் ரூ.10 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டி கொடுத்துள்ளார்.
இதனால் இப்பகுதி கிராம மக்கள் அனைவரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், திமுக அரசுக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். வரும் தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சர் ஆனவுடன் இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர்.
